உகந்தை முருகன் உற்சவத்தில் கலந்து கொள்ள 30 பேருக்கு மாத்திரம் அனுமதி

(வி.சுகிர்தகுமார் ,  எஸ்.கார்த்திகேசு)

  வரலாற்று சிறப்புமிகு உகந்தை முருகன் உற்சவத்தில் கலந்து கொள்ள 30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பாதயாத்திரை மற்றும் பக்தர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஆலய உற்சவம் தொடர்பில்  நேற்று வெள்ளிக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற உயர் மட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

லாகுல பிரதேச செயலாளர் சந்துருவான் அனுருத்த தலைமையில் ஆலய வண்ணக்கர் எம்.டி.சுதுநிலமே பங்களிப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் காரைதீவு பிரதேச செயலாளர் இ.ஜெகராஜன் பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எச்.பிரதீப்குமார பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உஷா பெரேரா மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாணமை விகாராதிபதி சந்திர ரத்தின ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம குருக்கள உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்தார். இதில் மேலதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னராக ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதன் பின்னராக பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதன்பின்னராக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக மாவட்ட செயலாளர் தீர்மானங்களை அறிவித்தார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி உற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பமாகும் எனவும் ஜுலை மாதம் 25ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடனும் மறுநாள் வைரவர் பூஜையுடனும் நிறைவுறும் என்றார். மேலும் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள குருமார் உள்ளிட்ட 30பேருக்கு மாத்திரம் சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர்களுக்கும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஆலயத்துள் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறினார்.

இதேநேரம் கொரோனா அச்ச நிலை காரணமாக மக்களது பாதுகாப்பை முன்னிறுத்தி எக்காரணத்தை கொண்டும் எந்தவொரு பக்தருக்கும் ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது எனவும் இதற்காக பொலிசார் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரையும் விசேட பாதுகாப்பு மற்றும் வீதிச்சோதனை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் உகந்தை முருகன் ஆலய உற்சவம் கதிர்காம உற்சவத்தோடும் பாதயாத்திரையோடும் தொடர்புபட்டுள்ள நிலையில்  இம்முறை யாழ்ப்பாணம் தொடக்கம் இலங்கையின் எந்தவொரு பாகத்திலிருந்தும் யாத்திரிகர்கள் வருகை தர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் உரிய மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வழமைபோன்று ஆலயத்தில் இடம்பெறும் சிரமதான நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பணியை கடற்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

ஆகவே பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டு உகந்தை முருகன் ஆலயத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறும் அவ்வாறு வருகை தருகின்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும் உறுதிபட குறிப்பிட்டார்.