வெருகல் மருத்துவ மனைக்கு உதவிகள்

(பொன்ஆனந்தம்)
திருகோணமலை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை  மத்திய நிலையத்திற்கு கையளிப்பதற்காக பெரெண்டினா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட  மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருத்துவ சாரா  பொருட்களும் திருகோணமலை  மாவட்ட அரசாங்க அதிபர் சமன்  தர்சன பாண்டிக்கோரளாவிடம் (18) கையளிக்கப்பட்டது.
ஈச்சிலம்பற்று வைத்தியசாலை அதிகாரிகளினால் கொவிட்  இடைநிலை மத்திய நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பெரெண்டினா நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட  விஷேட வேண்டுகோள் அடிப்படையில் பெரெண்டினா நிறுவனத்தின் அவசரகால நிவாரண திட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சம் பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவ சாரா பொருட்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில்   வழங்கிவைக்கப்பட்டது.
இந்த அத்தியாவசிய குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்த பெரெண்டினா நிறுவனத்துக்கும் தாம் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாகவும் இதன் மூலம் வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் சிறப்பான சேவையை வழங்குவதற்கு இது வழிவகுக்கும்  என்றும் தாம் நம்புவதாகவும்   மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்
வெருகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ உபகரணத்  தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி டாக்டர். சௌந்தர்ராஜன், ஈச்சிலம்பற்று கொரோனா  இடைநிலை மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் தேவதாசன், அதன் வைத்தியர்களான சாமர விஜயசிங்க, ஆர் எஸ் ஜே பண்டார, பெரெண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்  எஸ்.விஜிந்தன் சக உத்தியோகத்தர்களான  கே.தவசீலன், சம்பத் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.