வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சினோபாம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவுற்றது.

(க.ருத்திரன்) மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சினோபாம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று ஞாயிறு (12) மாலையுடன் நிறைவுற்றது. தங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 1337 பேருக்கு பிரதேசத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இவை செலுத்தப்பட்டன.இவ் நடவடிக்கையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சினோபாம் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களுக்கு எதுவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லையென்றும் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென சுகாதார வைத்திய அதிகாரி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும் மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படவுள்ளதாகவும் தங்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லையென மக்கள் குழப்பமடைய தேவையில்லையென அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 250000 தடுப்பு ஊசிகள் முதற் கட்டமாக கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் கடந்த 08.06.2021 ஆம் திகதி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.