கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனா திவீரம் அடுத்த இருவாரங்களில் மரணங்கள் அதிகரிக்கலாம்!(கு.சுகுணன்)

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனைப்பிராந்தியத்தில் வழமைக்கு மாறாக கொரோனா நச்சுயிரின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக அடுத்த இருவாரங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 2000ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது நேற்று(13)வரை அந்த எண்ணிக்கை 2023 ஆகவிருந்தது.மரணங்கள் 27ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 3பேர் மரணித்துள்ள அதேவேளை மருதமுனை மற்றும் பாலமுனை கொவிட் இடைத்தங்கல் நிலையங்களில் இவ்வாரம் இருவேறு மரணங்கள் சம்பவித்துள்ளமை பற்றிக்; கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியம் கூடிய திரிவுபட்ட 117 அல்பா வைரஸ் மிகவும் பாரதூரமானது. அது விரைவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அட்டப்பள இளம் குடும்பஸ்தரின் மரணத்திற்கும் இவ்வகை வைரசே காரணமென சந்தேகிக்கிறோம் என்றார்.

இடைத்தங்கல்முகாம்களில் தங்கியிருப்போருக்கு நோயின்தாக்கம் ஆபத்துநிலையைஅடைகின்றபோது ஏனைய வளமுள்ள வைத்தியசாலைகள் அவர்களை உள்வாங்கி சிகிச்சையளிக்கவேண்டியது அவசியமாகும்.
கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரின் ஏற்பாட்டில் வெகுவிரைவில் நான்கு வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் ஆகிய ஆதாரவைத்தியசாலைகளில் இத்தகைய 100 கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்வண்ணம் வசதி செய்யப்படவிருக்கின்றது.அதற்காக நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.அப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
அதேவேளை முதலிரு அலைகளை விட மிகமோசமான தாக்கத்தை இந்த மூன்றாவது அலை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இடைத்தங்கல் நிலையங்களில் பராமரிப்பு சேவையும் வைத்தியசாலைகளில் கொவிட்நோயாளிகளுக்கு சிகிச்சைவழங்கும் சேவையும் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டுமென சமுகஆர்வலர்கள் என்னிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
அதுதொடர்பாக இரண்டொரு தினங்களில் ஊடகங்களின் முன்னிலையில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.

கிழக்கில் 11ஆயிரத்தைக் கடந்த தொற்றுக்கள்:213மரணங்கள்!
47726தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்கிறார் பணிப்பாளர் தௌபீக்
உலகத்தில் ஊழித்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் இறுதியாக அண்டைய நாடான இந்தியாவில் மோசமாக கோரத்தாண்டவம் ஆடி சமகாலத்தில் இலங்கையில் திவீரமாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கள் இரண்டுலட்சத்தைக்கடந்திருக்கின்ற அதேவேளை மரணங்களின் எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.அதாவது 2073பேர் மரணித்துள்ளனர்.
பயணத்தடை அமுலுக்குப் பின்னரும் தினம்தினம் 3ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.
இதுவரை இலங்கையில் 2லட்சத்து 18ஆயிரத்து 923 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மரணங்கள் 2073ஆக உயர்ந்துள்ளது. 30ஆயிரம் பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதுஇவ்வாறிருக்க கிழக்கு மாகாணத்தின் நிலைவரம் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டுபோகின்றது.
அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தைக் கடந்து 11247 ஆக உயர்ந்துள்ளது. மரணங்கள் 200ஜத்தாண்டி 219ஆக உயர்ந்துள்ளது. இதில் 193மரணங்கள் 3வது அலையில் ஏற்பட்டதாகும்.
இதுவரை கல்முனைப்பிராந்தியம் தவிர்ந்த ஏனைய மூன்று பிராந்தியங்களிலும் இதுவரை 33883 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப்பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
இந்த 47726 தடுப்பூசிகளில் அம்பாறைப்பிராந்தியத்திற்கு அதிகூடிய 18496 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக மட்டக்களப் பு மாவட்டத்திற்கு 16661 தடுப்பூசிகளும் திருமலை மாவட்டத்திற்கு 12569தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் 13 சுகாதாரப்பிரிவிலும் முன்னெடுக்க்பபட்டுவருகின்றது. விரைவில் அங்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.