ஐந்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா அன்று உள்ளுர் மக்களுக்காக ஐந்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

( வாஸ் கூஞ்ஞ)

ஆடி மாதம் இரண்டாம் திகதி நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மருதமடு அன்னையின் பெருவிழாவில் வெளி மாவட்டவர்கள் கலந்துகொள்ள முடியாத நிலையில் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து உள்ளுர் பக்தர்களுக்காக ஐந்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். இவற்றில் மறைக்கோட்ட ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களே கலந்துகொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆடி பெருவிழா தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஊடக சந்திப்பு ஒன்றை அவரின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடாத்தினார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில்

வருடந்தோறும் இடம்பெற்றுவரும் இவ் வருடத்துக்கான மருதமடு அன்னையின் திருவிழா ஆடி மாதம் இரண்டாம் திகதி இடம்பெற இருக்கின்றது.

இவ் வருடத்துக்கான இவ்விழா தொடர்பாக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுகளுடன் இவ் விழாவை நாம் நடாத்த வேண்டியுள்ளது.

எனவேதான் யாத்திரிகர்கள், பக்தர்கள் நடைபெற இருக்கும் இவ் ஆடி மாத பெருவிழாவுக்கு மன்னார் மறைமாவட்டம் தவிர வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவதை தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே இவ் பெருவிழாவுக்கு வருகைதர இருப்போருக்கு நாம் இதை முன்கூட்டியே அறியத்தர வேண்டியுள்ளது.

இவ் பெருவிழாவுக்கு வழமையாக வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மருதமடு அன்னையிடம் பரிந்துரைக்க  வேண்டிச் செல்வர்.

ஆனால் இவ் வருடம் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த நாட்டிலே இருக்கக்கூடிய அச்சுறுத்தல் மத்தியில் பல கட்டுப்பாடுகள் அரசாங்க அதிகாரிகள் வழியாகவும், சுகாதார அதிகாரிகள் வழியாகவும் எமக்கு தரப்பட்டுள்ளன.

எனவே இப் மாதம் அதாவது ஆனி மாதம் 23 ந் திகதி வழமைபோன்று கொடியேற்றத்துடன் இவ் விழாவை ஆரம்பித்து இதைத் தொடர்ந்து நவநாட்களும் நடைபெறும். ஆனால் இவ் வழிபாடுகளுக்கு 15 நபர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் 2 ந் திகதி காலை பெருவிழா திருப்பலி மருதமடு அன்னையின் திருத்தலத்தில் வழமையாக பெருவிழா திருப்பலி நடைபெறும் ஆலய முன்றல் பகுதியிலேயே நடைபெறுவதுடன் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்படும்.

இந் நாளில் நாங்கள் அதிகமான திருப்பலிகளை ஒப்புக்கொடுத்தாலும் அதிகமாக 30 பக்தர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும் என சுகாதார அதிகாரிகள் எமக்கு அறியத்தந்தள்ளனர்.

ஆகவே இவ் விழாவுக்காக வெளியிலிருந்து வருபவர்கள் மடு சந்தியில் வைத்து அன்ரிஐன் பரிசோதனைக்கு உட்பட்ட பின்பே ஆலய வளாகத்துக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படுவர்.

பெருவிழா திருப்பலியின்போது பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் இல்லாதபோதும் இவ் திருவிழாத் திருப்பலியை தொலைக்காட்சி ஊடாக கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் பக்தர்கள் கலந்துகொண்டு உங்கள் பக்தி முயற்சியில் ஈடுபடலாம். இவ் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மேலும் ஐந்து திருப்பலிகள் அன்றையத் தினம் இடம்பெறும்.

இவ் திருப்பலிகளில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள வௌ;வேறு மறைகோட்டங்களிலுள்ள மக்களை அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே இந்த கட்டுப்பாடுகளை பக்தர்கள் ஒவ்வொருவரும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றேன். மருதமடு அன்னையிடம் இவ் வருடம் விஷேடமாக வேண்டுவோம் அவவின் பரிந்துரையினால் இந்த கொள்ளை நோய் முற்றுமுழுதாக எம்மிடமிருந்து ஒழிக்கப்பட்டு நாங்கள் இந்த நாட்டில் விடுதலைபெற்ற மக்களாக மீண்டும் எமது வழமையான வாழ்க்கையை வாழக்கூடிய மக்களாக இருக்க மருதமடு அன்னை இறைவனிடமிருந்து அருள்களை பெற்றுத்தர மன்னறாடுவோம் என இவ்வாறு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.