மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் அகப்பட்டவர்கள் 1199 நபர்கள் அடையாளம்!

 

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மூன்றாவது அலை காரணமாக 1199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான சிபார்சினை தேசிய கோவிட் செயலணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள், பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியும் எனவும் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்குப் பத்தாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.