பெரியகல்லாறு கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு உணவுவழங்கியவரின் ஒப்பந்தம் ரத்து.

மட்டக்களப்பு பெரியகல்லாறு வைத்தியசாலையின் கொவிட் தடுப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்கிய ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தம் இரத்துசெய்யப்பட்டு பிறிதொரு ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட  வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும்  உணவின் தரம் குறித்து தமக்கு பல்வேறு முறைப்பாடுகள் எழுத்துமூலமாக கிடைக்கப்பெற்றதையடுத்து இந்நடவடிக்கைமேற்கொண்டதாகஅவர் மேலும் தெரிவித்தார்.

  இதேவேளை பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார்.

கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோகிப்போருடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன், உணவின் தரத்தினை பேணுமாறு வலியுறுத்தியிருந்தார்.