துரைரெட்ணசிங்கத்தின் இறுதிக்கிரியைகள் திருமலை இந்து மயானத்தில்.

பொன்ஆனந்தம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் அவர்களின் இறுதி கிரிகைகள் திருகோணமலை இந்து மயானத்தில் சுமார் 12.00மணியளவில் நடைபெற்றது.  இவர் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கந்தளாய் வைத்தியமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள் இரவுகாலமாகியிருந்தார் .

இவரது பூதவுடல் பெட்டி மூடப்பட்ட நிலையில் இந்து மயானத்திற்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டன. இந்நிலையில் அவரது இழப்பு குறித்து பலரும் அஞ்சலி யையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்த வண்ணமுள்ளனர்
திருகோணமலை மாவட்டம், கொட்டியாபுரப்பற்றின் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர். 1941.01. 04.இல் பிறந்தார்.
மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.
1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் 1982 இல் சேனையூர் மத்திய கல்லூரியின்  பிரதி அதிபராக வும், இறுதியாகஅதிபராகப் பதவி உயர்வு பெற்று சிறந்த பணியாற்றிவந்தார். பின்னர் கொத்தணி அதிபராக வும் கடமையாற்றி யுள்ளார்.
1998 இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி கல்வித்துறையில் இருந்து இளைப்பாறினார்.
துரைரெட்ணசிங்கம்  2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.
ததேகூ உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்தும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. ஆனாலும், ததேகூ தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 யூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார்.
திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் மீளவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை.
துரைரட்ணசிங்கம்  2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.
இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதேவேளையில் தமிழரசுக்கட்சி யின் திருகோணமலை மாவட்ட குழுதலைவராக பணியாற்றய இவர் இறுதிவரை தமிழரசுக்கட்சி யின் உபதலைவராக வும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேசிய ரீதியிலும் இலங்கையிலும் அகோரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்று திங்கள் இரவு  தனது 80வது வயதில் காலமானார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் இன்று காலை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெற்றது.