மட்டக்களப்பில் பல்கலைக்கழக அனுமதியை தவறவிட்ட 2150மாணவர்கள் : மாவட்ட தரப்படுத்தலில் கலைப்பிரிவில் 22ம் இடம்.

(படுவான் பாலகன்)
அண்மையில் வெளியாகியிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கு தோற்றிய மாணவர்களில் 2150பேர் சித்திபெறாது பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்;ப்பினை இழந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளிப்பகுப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்ற 5762மாணவர்கள் புதிய பாடத்திட்டத்திற்காக தோற்றியிருந்தனர். அவர்களில் 3612பேர் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பினை பெற்றுள்ளனர். ஏனைய மாணவர்கள் சித்திபெற தவறியுள்ளனர். அதேவேளை ஒவ்வொரு பிரிவிற்கான மாவட்ட தரப்படுத்தலின் அடிப்படையில் பொதுப்பிரிவில் 59மாணவர்கள் தோற்றி 30மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பை பெற்று மூன்றாவது மாவட்டமாக உள்ளமையுடன், விஞ்ஞானப்பிரிவில் 12வது மாவட்டமாகவும் உள்ளது. மேலும் கலைப்பிரிவிலேயே பின்நிலையில் உள்ளது. குறிப்பாக குறித்த பிரிவில் 22வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இப்பிரிவில் 2583மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன், 1729ம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பினை பெற்றுள்ளமையுடன், 854பேர் சித்திபெற தவறியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
மேலும், அனைத்து பிரிவுகளின் மாவட்ட தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டம் 22வது மாவட்டமாக இடம்பிடித்துள்ளது.