துறைமுக நகர சட்ட மூலத்தை எதிர்த்தே வாக்களிக்க வேண்டும்”

அ.இ.மக்கள் காங்கிரஸின் உயர்பீடதீர்மானம் இதுவாம்
(ஏ.எல்.எம்.சலீம்)

“துறைமுக நகர சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தலைவர் உட்பட) அதனை எதிர்த்தே வாக்களிக்க வேண்டும். இது கட்சியின் அரசியல் அதி உயர்பீடத்தீர்மானம் ஆகும்.”
இவ்வாறு நிந்தவூரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவிக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசயில் உயர்பீட உறுப்பினர்களான, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம்.ஏ.றசாக் (ஜவாத்) பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், அம்பாறை மாவட்ட செயற் குழுத்தலைவர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் இணைந்து இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.
மேற்படி தகவலை இதன் போது வெளியிட்ட உயர் பீட உறுப்பினர்கள் மூவரும் உயர்பீடத்தின் மேற்படி தீர்மானத்தை மீறி எவராவது நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டிடை முன்னெடுத்தால் அத்தகையவர்கள் மீது கண்டிப்பான ஒழுக்காற்று நடவடிக்கையைக் கட்சி அடுக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், கட்சிக்கூட்டுப் பொறுப்பற்றதும், திட்டமிடலில்லாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் மேற்படி உயர்பீட உறுப்பினர்கள் மூவரும் குற்றஞ்சாட்டி கவலை வெளியிட்டனர்.
பொத்துவிலில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் துக்கம் தெரிவிக்கும் வகையில் நோன்புப் பெருநாள் தினத்தன்று வீடுகளில் கறுப்புக்கொடிகளைப் பறக்க விடுமாறு கோரியுள்ளார்.
இது அவரது தனிப்பட்ட தீர்மானமே தவிர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் அல்ல எனவும் அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.
இது தனிப்பட்ட விடயம், தனி மனித முடிவு எனத் தெரிவித்த அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரபும் ஏனையோரும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கறுப்புபட்டி, சால்வைகளுடன் கலந்து கொள்வார்களா? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், தலைவர் ரிஷாட்டின் விடுதலைக்காகக் கூட்டுப் பொறுப்புடன் மசூரா அடிப்படையில் தொடர்ச்சியாக இயங்க நாம் முன்னிற்கிறோம் எனத் தெரிவித்த உயர் பீட உறுப்பினர்கள் மூவரும், தலைவரின் விடுதலையை முன்னிலைப்படுத்தாத, சுய அஜந்தாக்களைக் கொண்டவர்களின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
தங்களது அரசியல் தடுமாற்றங்களை சரி செய்வதற்கு நிலர் முயன்றுள்ளதுடன், அரசியல் நலன்களை நாடி சிலர் நடந்து கொள்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர்கள் விசனத்துடன் கருத்து வெளியிட்டனர்.
நமது நலன் சார்ந்த அரசியலை செய்ய கட்சிப்பற்று, விசுவாசம் கொண்ட நாங்கள் துணைபோக மாட்டோம் எனவும் குறித்த உயர்பீட உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

20 ஆவது
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கட்சிக்கட்டுப்பாட்டை மீறி ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது,
ஒழுக்காற்று விசாரணைகளை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் முடிவில் உரிய நடவடிக்கை உரியவர்கள் மீது எடுக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.