மட்டக்களப்பில் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்கின்றார் பிரிக்கேடியர் கமகே

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid – 19) கொரோனா தடுப்பு செயலணியின் பிரிக்கேடியர் எஸ்.ஆர்.ஜீ.கமகே தனது 7 மாத சேவையினை பூர்த்தி செய்து தற்போது கம்பஹா மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவ தரப்பு பிரதானியாக இன்று 30.04.2021 வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.

இவர் கடந்த 7 மாத காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வந்த போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தெற்றின் தாக்கம் அதிகளவில் பரவி வந்த காலகட்டத்தில் இன, மத, சாதி வேறுபாடுகள் இன்றி தனது அர்ப்பணிப்பான பணியினை இம் மாவட்டத்திற்கு வழங்கி ஒரு மாத காலத்திற்குள் கொரோனா பரவலினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இவருடைய பாரிய பங்களிப்பும் காணப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவ தரப்பின் பிரதானியாக செயற்பட்டு சுகாதார திணைக்களத்துடன் மற்றும் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெருங்கி பணியாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தினை இயல்பு நிலைக்கு குறுகிய காலத்திற்குள் கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தினையும் துரிதமாக ஆரம்பித்து தரவுகளை உரிய முறையில் வெளியிடுவதற்கான செயற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக தனது அர்ப்பனிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரிற்கான பிரியாவிடை நிகழ்வானது  மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் தலைமையில் இன்று (30) ஆந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் புதிய இராணுவ தரப்பு பிரதானி கேணல் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்களாகிய உ.உதயசிறிதர், வீ.வாசுதேவன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கு.சுஜாத்தா
, வைத்திய நிபுணர் சுந்தரேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரிக்கேடியர் கமகே அவர்களின் சேவையினை பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.