திருமலையில் இன்றும் 06 கிராமசேவகபிரிவுகள் முடக்கம்.அரசாங்க அதிபர்

பொன்ஆனந்தம் 
திருகோணமலை மாவட்டத்தின் சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 7 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அரசாங்க அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
சீனக்குடா,காவட்டிக்குடா,இலிங்கநகர், கோயிலடி,சுமேதங்கரபுர,மட்கோ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகும்.இதனைவிட பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஏலவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு மற்றும் கொடுப்பனவுகள் காலக்கிரமத்தில் வழங்கப்படவுள்ளன.இதற்கு மேலதிகமாக அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுகளும் விரைவில் வழங்கப்படும்.
மக்கள் இச்சந்தர்ப்பத்தில் அநாவசிய பயணங்களை தவிர்த்து வீடுகளிலே தங்கியிருப்பதுடன் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல் , கைகளை அடிக்கடி கழுவல், சமூக இடைவெளி பேணல் , ஒன்றுகூடல்களை தவிர்த்தல் என்பன பிரதானமானதாகும். முகக்கவசமின்றி பொறுப்பற்ற முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும .நேற்று மாத்திரம் மாவட்டத்தில் முகக் கவசம் இன்றி நடமாடிய 60 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பரவியுள்ள கொவிட் பரவலை ஒழிக்க மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் இதன்போது வேண்டிக்கொண்டார்.