சுவிசில் ஜூலை முதல் 3000 பேர், செப்டம்பர் முதல் 10,000 பேர்நிகழ்வுகளில் பங்கேற்ப வாய்ப்பு.

கோடைகாலத்தில் மாற்றம் எதிர்பார்க்கலாம் *

சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 28. 04. 21 புதன்கிழமை தமது மகுடநுண்ணி (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கையின் தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் அறிவித்தது. சுவிஸ் நாட்டின் அதிபர் குய் பார்மெலின் தனது உரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பினை தொடங்கினார்: “மகுடநுண்ணித் தொற்றுச் சூழலை சுவிஸ் அரசு எதிர்காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் எனும் செறிவான எண்ணம் கொண்டுள்ளது, தற்போது சுவிசின் சூழல் திடமாக இருப்பினும் உலகப்பொதுச்சூழல், குறிப்பாக இந்தியாவில் தற்போது உள்ள திரிவடைந்த தொற்று நுண்ணி எமக்கு எச்சரிக்கை உணர்வினை அளிக்கின்றது”.

நிகழ்வுகள்

எதிர்காலத்தில் நிகழ்வுகளுக்கு காப்பமைவுத் திட்டங்கள் இருக்கவேண்டும். நோய்தொற்றுச் சூழுல் காரணமாக நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டால் ஏற்படும் காப்பற்ற செலவுகளில் நடுவனரசு, மாநில அரசு பங்கெடுக்கும்.

இவ்விதியானது 01. 06. 2021 முதல் 30. 04. 2022 வரை முதற்கட்டமாக செல்லுபடியாகும். இதனை நடைமுறைப்படுத்த ஏதுவான சட்டவரைவுகளை மாநில அரசுகள் ஆக்க வேண்டும். இவ்விதி 10.05.21 வரை மாநில அரசுகளின் பரிசீலனைக்கு அறிவுரை பெறுதலிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவிக்கையில் கோடை 2021 முதல் பெருநிகழ்வுளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா என்பது நோய்த்தொற்றுச் சூழலும், மாநிலங்கள் அறிவிக்க உள்ள வரையறைகளையும் கொண்டே பதிலளிக்க முடியும் என்றார்.

இது தொடர்பான தெளிவான பதிலை தாம் ஆடவைத்திங்கள் (யூனி 2021) நிறைவில் அறிவிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கோடை 2021

பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி இடுவது ஊடாகவும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் நற்பேறுகளாலும் கோடை 2021 காலத்தில் மீண்டும் பெருநிகழ்வுகள் நடைபெற ஒப்புதல் வழங்கும் வாய்ப்பு அமையலாம்.

நிகழ்வுகளுக்கு காப்பமைவு கட்டாயமாகும். நிகழ்வில் பங்கெடுப்போர் மகுடநுண்ணித் தொற்று அற்றவர் அல்லது தடுப்பூசி இட்டவர் எனும் சான்றினைக் கொண்டிருக்க வேண்டும்.

மிகுபெரும் நிகழ்வுகள் தொற்றுப்பரவல் காரணமாக நடைபெறமுடியாதுபோனால் அதன் செலவுகளை எதிர்கொள்ள பாதுகாப்புக் குடையாக காப்பு அமைக்க சுவிஸ் அரசு திட்டத்தை ஆய்வுசெய்து வருகின்றது.

விடைத்திங்கள் (மே 2021) நிறைவில் கடகத்திங்கள் (யூலி 2021) முதல் 3000 ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு உரிய வரையறையுடன் மற்றும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு ஏற்ப ஒப்புதல் (அனுமதி) வழங்கலாம். மடங்கற்திங்கள் (செப்டெம்பர் 2021) முதல் பெருநிகழ்வுகளில் பங்கெடுக்கும் ஆட்களின் தொகை 10 000 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.

தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள்,; தொற்றுச்சோதனை செய்தோர், நலம் அடைந்தோர்:

பெரும் நிகழ்வுகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு அமைந்தாலும் அதன்போது நிகழ்வில் பங்கெடுப்போர் மேற்கண்ட நிரலிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். மேலும் பல்கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டி இருக்கும்.

பெரு நிகழ்விற்கான காப்பமைவினை தேர்வாய்வுசெய்துபார்க்க ஆடவைத்திங்கள் முதல் (யூனி 2021) முன்னோட்டநிகழ்வாக குறைந்தது 300 முதல் கூடியது 600 மக்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிக்க சுவிஸ் அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கின்றது.

இவ்வாறான மேலே குறிப்பிட்ட மக்கள் மட்டும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதை காப்பமைவு முறமையால் உறுதிசெய்ய முடியுமா என்பதும் இதனூடாக கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

அறுதித்தீர்மானம் 26. 05. 21 அறிவிக்கப்படும்

இம்முன்னறிவிப்புக்கள் மாநில அரசுகள் தமது முடிவுகளை எட்டுதற்கு உதவியாக சுவிற்சர்லாந்து நடுவனரசால் இன்று அறிவிக்கப்படுக்கின்றது. முடக்கத்தை தளர்த்துவதற்கான திட்டம் எதிர்வரும் நாட்களில் நிலவும்சூழல் மற்றும் பட்டறிவுகொண்டு எடுக்கப்படும். 26. 05. 2021 சுவிஸ் நடுவனரசு பெருநிகழ்வுகள் நடத்துவதற்கு அளிக்கப்படும் ஒப்புதல் தொடர்பான அறுதிமுடிவினை அறிவிக்கும்.

கோடைகால நிறைவுக்குள் சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் ஒரேமாதிரியான மகுடநுண்ணி (கோவிட்) சான்றிதழ் வழங்கப்படும். அச்சான்று கண்காணிப்பினை இலகுபடுத்தும் என நம்பப்படுகின்றது.

காப்புக்குடைக்கு முன்மொழிவு

1000 ஆட்களுக்கு மேற்பட்டு மாநிலம் தாண்டி நடைபெறும் பெருநிகழ்வு திட்டமிடப்பட்டு, அந்நிகழ்வு தொற்றுச்சூழல் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டால் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு உரிய ஈடுவழங்க திட்டமிடப்படுகின்றது. சுவிஸ் நடுவனரசு மற்றும் மாநில அரசுகள் இவ் ஈடுவழங்கும் காப்புக்குடைத் திட்டத்தில் பங்கெடுக்கும். இவ்விதிக்கான முன்வரைவு கடந்த பாராளுமன்ற அமர்வின்போது முன்மொழியப்பட்ட விதியாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்விற்கு பெருநிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது முகமைப்பங்காக 30 000 ஆயிரம்பிராங்வரையான செலவினைப் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும். தானிழந்த தொகையில் 30 ஆயிரத்தைக் கழித்துக்கொண்டு மிகுதி இருக்கும் இழப்புத் தொகையில் 20வீதத்தையும் நிகழ்வு ஏற்பாட்டாளரே ஏற்கவேண்டும். மிகுதியை மேற்கண்ட காப்புறுதித்திட்டம் ஈடுசெய்யும்.

நடுவனரசு மற்றும் மாநில அரசு ஒரு நிகழ்விற்கு ஆகக்கூடியது 5 மில்லியன் சுவிஸ் பிராங் வரை ஈடுவழங்கும். இவ்விதி 01.06.21 முதல் 30.04.22 வரை செல்லுபடியாகும்.

மாநிலங்கள், நகரங்கள், ஊராட்சிமன்றங்கள், கூரையமைப்புக்கள், ஒன்றியங்கள், சமூகப்பங்காளர்கள், சமயங்களின் சபை மற்றும் பாராளுமன்றக் குழுக்கள் என்பன இவ்விதி தொhடர்பான தமது முன்மொழிவுகளை சுவிஸ் அரசிற்கு 10.05.21 வரை அளிக்க முடியும். இவர்களின் முன்மொழிவுகளை அரசு கவனத்தில் கொள்ளும்.

தொகுப்பு: சிவமகிழி