மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். எம்.ஏ.சுமந்திரன் பா.உ

  எஸ் தில்லைநாதன்

மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறை எங்கள் பிரச்சனைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஸ்டி கட்டமைப்பில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 புதுவருட தினமான நேற்று புதன்கிழமை(14) அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
 அவர் அங்கு மேலும் கூறுகையில் இன்றைய தமிழ் சிங்கள புத்தாண்டு இந்நாட்டிலே மக்கள் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என வாழ்த்துகின்றோம். நாட்டிலே பல விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. பொருளாதார பிரச்சனைகள் இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கிறது. இந்த சூழ்நிலையிலே இப்புத்தாண்டு கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களுக்காக நாங்கள் விசேடமாக அவர்களை நினைவு கூறுகின்றோம். செலவழிக்க முடியாவிட்டாலும் வருகின்ற புத்தாண்டு எங்களுக்கு நல்ல புத்தாண்டாக அமைய வேண்டும் என பிராத்திக்கின்றோம்.
 தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த புத்தாண்டிலாவது எங்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திப்பது மட்டுமல்ல அதற்காக தொடர்ந்து எங்களது பிரயாசையையும் நாங்கள் கொடுத்துக் கொண்டேயிருப்போம்.
எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்து சொல்லுகின்ற அதே வேளையில் விசேடமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.
அரசாங்கத்துக்குள்ளே மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது. அரசியல் கட்சியாக அவர்கள் அந்த இரண்டாவது நிலையிலேயும்  தாங்கள் ஆட்சிகளை கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால் கடும்போக்குவாத பின்னணியை கொண்ட பலர் இந்த அரசாங்கத்தை இந்தத் தடவை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்கு வாதிகள் மாகாணசபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கிறார்கள். ஆகையினாலே இந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையே நடக்கின்ற இழுபறி யாருக்கு வெற்றியில் முடியும் என்பதை எங்களால் சொல்ல முடியாதிருக்கிறது.
 எங்களைப் பொறுத்தவரையிலே மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறையோடு நாங்கள் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால் அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஸ்டி கட்டமைப்பில் வடக்கு கிழக்கு இணைந்ததாக ஒரு ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசாங்கம் நியமித்துள்ள குழுவுக்கு முன்வைத்துள்ளோம். அவர்களுடன் நீண்டதொரு சம்பாசனைய நடத்தி இருக்கின்றோம். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று கடிதங்கள் அவர்களுக்கு எழுதியுள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும்.
மாகாணசபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
என்னுடைய பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அது பாதுகாப்பு தரப்பினருக்கு தான் தெரியும். இது அவர்களே நீதிமன்றத்துக்கு முன்பாக பல அறிக்கைகளை முன்வைத்து சொன்ன செய்தி.
 பல ஆயுதங்களை கண்டெடுத்து 2019 திலிருந்து ஒரு நீதிமன்ற வழக்கில் இந்த 15 பேரையும் உட்படுத்தி என்னை கொலை செய்த முயற்சித்தார்கள் என்றும், வேறுபல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் தடுப்புக் காவலிலே  இருந்தவர்கள். நேற்று முன்தினம் அவர்களிலே 11 பேர் அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் சொன்னதாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதனுடைய பின்னணி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இதே போல இன்னும் ஓரிரு வழக்குகள் இருப்பதாக அறிகிறேன். ஆகையினாலே அரசாங்கம் ஜனவரி மாதத்திலேயே பாராளுமன்றத்திலே பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது நான் அவருக்கு எச்சரிக்கை செய்து இருக்கின்றேன் என கூறினார். பிறகு பெப்ரவரி மாதத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி நடைபயணம் முடிவடைகின்ற போது என்னுடைய விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டது. அதைப்பற்றி எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதும் அந்த நாள் மூன்று தடவைகள் அவர் திரும்பத் திரும்ப பாராளுமன்றத்தில் கூறினார் அவருக்கு(சுமந்திரனுக்கு) உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எங்களுடைய ஆராய்ச்சியின் படி அவருக்கு இப்போதும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது ஆனால் அவர் நடைபயணத்தில் சென்றதன் காரணத்தினால் இதனை நீக்குகிறோம் அன்று சொன்னார். ஆகவே உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டே விசேட பாதுகாப்பை அவர் நீக்கிய காரணத்தினால்தான் அன்றைக்கே பாராளுமன்றத்தில் சொல்லியிருந்தேன் எனக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று. இப்பொழுது  என்னுடைய பாதுகாப்பிலிருந்து நீக்கி என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று அவர்களாகவே இரண்டரை வருடங்களாக தடுத்து வைத்திருந்த 11 பேரை விடுவித்து இருக்கிறார்கள். ஆகவே அடுத்தடுத்ததாக என்ன நடக்கும் என்று சொல்ல தெரியாது. இதற்கு முழுப்பொறுப்பும் சரத் வீரசேகராவும், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும், அரசாங்கமும்தான் எடுக்க வேண்டும் என்க்கூறினார்.

இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.