சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : திடீர் அறிவிப்பை வெளியிட்ட போராட்ட களத்தில் நின்ற இளைஞர்கள் !!

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக  வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த ஒன்பது நாட்களாக அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் கையெழுத்து வேட்டையிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரவு 08.30 முதல் தங்களின் போராட்டத்தை கைவிட உள்ளதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்கள், எங்களின் போராட்டத்தை நோன்பின் மகிமையை கருத்தில் கொண்டு இன்றுடன் தற்காலியமாக கைவிடுவதாகவும் சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் தொடர்பில் எங்களுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளமையால் தாங்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை பொறுமை காத்திருக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த விடயம் தொடர்பில் பக்கபலமாக இருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்த அவர்கள் விரைவில் இது தொடர்பில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அந்த நம்பிக்கை பொய்யாகும் சந்தர்ப்பத்தில் பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.