அக்கரைப்பற்றில் தீயில் கருகிய பழுது பார்க்கும் நிலையம்.

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம் பிரதான வீதியின் மகாசக்தி நிறுவனத்திற்கு அன்மித்த பிரதேசத்தில் அமைந்திருந்த மின்சார உபகரணங்கள் பழுது பார்க்கும் நிலையமொன்று இன்று பிற்பகல் தீயில் கருகி நாசமானது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் நிலைமை அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.

உபகரணங்கள் பழுது பார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் நிலையத்தை பூட்டிவிட்டு வெளிப்பிரதேசமொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூடப்பட்டிருந்த கடையில் இருந்து புகை மண்டலம் வெளியே வருவதை அவதானிக்க முன்னால் இருந்த கடை உரிமையாளர் தீப்பற்றிய கடையின் உரிமையாளருக்கு தகவலை வழங்கியுள்ளார். இந்நிலையில் தீப்பற்றிய கடையின் உரிமையாளர் அவரது  கடையின் பூட்டினை உடைத்து தீயை கட்டுப்படுத்துமாறு அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் செயற்பட்ட முன் கடை உரிமையாளர் பூட்டினை உடைத்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளதுடன் தீயணைப்பு பிரிவினருக்கும் தகவலை வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதேநேரம் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிசாருக்கும் தகவலை வழங்கியதுடன் தீயில் கருகிய உடைமைகளின் சேதம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார்