மரங்களின் பாதுகாவலன் மரநடுகை செயற்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மரங்களை நடுவோம் இயற்கையைப் பாதுகாப்போம், மரங்களின் பாதுகாவலன் மரநடுகை செயற்திட்டமானது  நேற்ற 04.04.2021 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

பேடன் பவளின் 164 ஆவது ஜனன தினத்தினை நினைவு கூறும் முகமாக இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இலங்கையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதின் ஒரு அங்கமான இருபத்தையாயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்திட்டத்தினை சக்தி, சிரச மற்றும் எம்.ரீ.வீ ஊடக அனுசரனையுடன், எஸ்லோன் லங்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் குறித்த மரநடுகை நிகழ்வானது 16 நாள் செயற்திட்டமாக நாடு பூராகவும் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான வளாகத்தில் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட சாரண சங்கத்தின் தலைவருமாகிய கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.

அதிதிகளின் வரவேற்பினைத் தொடர்ந்து, தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்தோடு அதிதிகளின் விசேட உரையினைத் தொடர்ந்து, அதிதிகளினால் மரக்கன்றுகள் சாரணிய மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் அதிதிகளினால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சாரண மாணவர்களும் அவர்களது பெற்றோரும் இணைந்து நாட்டிவைத்ததுடன், குறித்த மரங்களுக்குப் பொறுப்பான மாணவர்களது தரவுகள் ஒன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க செயலாளரும், கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான எஸ்.நவநீதன், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் வீ.பிரதீபன், எஸ்லோன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.விஜயசிங்க, விற்பனை பிரதிநிதிகளான சுரேன் விஜயராஜ், புஸ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அரசினால் மரங்களை நடும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் அரசாங்கமும் தனியார் துறையினரும் சாரணர் இயக்கமும் இணைந்து பசுமை புரட்சியை ஏற்படுத்தி இயற்கையைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கும் இத்திட்டத்தின் ஊடாக நடப்படவுள்ள இருபத்தையாயிரம் மரக்கன்றுகளிற்கும் இருபத்தையாயிரம் பாதுகாவலர்கள் இருக்கப்போகின்றார்கள் என்பது விசேட அம்சமாகும்.