மட்டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கை .பா.உ கருணாகரம் குற்றச்சாட்டு.

சிவில் பாதுகாப்புப் படையினர் மரமுந்திரிகையை நட்டு இரண்டு இரண்டு ஏக்கராக ஒருவரைப் பராரிப்பதற்கும் விட்டிருப்பதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் அந்த நபர்களுக்கே அவை பிரித்துக் கொடுத்து இங்கு ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே தோணுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

இன்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு கிராம சேவகர் பிரிவில் கந்தர்மல்லிச்சேனை என்கின்ற மேய்ச்சற்தரைப் பிரதேசத்தை இன்று நாங்கள் பார்வையிட வந்திருக்கின்றோம். ஏற்கனவே நாங்கள் பண்ணையாளர்களுடன் இந்தப் பிரசேத்தைப் பார்வையிட்டோம். இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தோம். இது சம்மந்தமாகப் பட்டிப்பளைப் பிரதேச செயலாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து இப்பிரதேசத்திலே சட்டவிரோதமாக நடைபெறும் மரமுந்திரிச் செய்கையை நிறுத்த வேண்டும். காலம் காலமாக இப்பிரதேசம் பண்ணையாளர்களினால் மேய்ச்சற்ரையாகப் பாவிக்கப்பட்டுவந்த பிரதேசம். இது தொடர்ந்தும் மேய்ச்சற்தரையாகவே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான மேய்ச்சற்தரைப் பிரசேத்தில் மரமுந்திரிச் செய்கை என்பது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு பிரதேச செயலாளரின் ஊடாக மாவட்ட வனஇலாகா திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டும் தற்போது நாங்கள் வருகை தந்து பார்க்கின்றபோது மேற்படி மரமுந்திரிகைச் செய்கை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதனைப் பாhக்கும்போது ஒன்று எங்களுக்கு விளங்குகின்றது. கடந்த காலங்களில் மரமுந்தரிகைச் செய்கையை ஊக்குவிப்பதென்று சொல்லி மட்டக்களப்பில் வடக்கு மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேசங்களில் ஒருவருக்கு மூன்று ஏக்கர் மரமுந்தரிச் செய்கைக்குக் கொடுத்ததைப் போன்று தற்போது இந்த தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையை அபகரித்து சுமார் ஆயிரத்து ஐநூறு ஏக்கரில் மரமுந்திரிச் செய்கை பண்ணப்பட்டு எமது அண்மித்த மாவட்டமான அம்பாறை மாவட்டப் பெரும்பான்மையின மக்களுக்கு இது பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவே எமக்குத் தோணுகின்றது.

ஏனெனில் இந்த மரமுந்திரிச் செய்கையிலே குறிப்பிட்டவர்களது பெயர்களைப் பதிவு செய்து இரண்டு ஏக்கர் வீதமாக அவர்களைப் பராமரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஒட்டுமொத்தமாக இந்த சிவில் பாதுகாப்புப் படை மரமுந்திரிகையை நட்டு இரண்டு இரண்டு ஏக்கராக ஒருவரைப் பராரிப்பதற்கும் விட்டிருப்பதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் அந்த நபர்களுக்கே அந்த ஏக்கர்களை பிரித்துக் கொடுத்து இங்கு ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி மட்;டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகத் தான் நாங்கள் இதனைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.