இரு வேறுவிபத்துக்களில் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்

எப்.முபாரக்
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு(1) இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது வீதியோரத்தில் நின்ற நபரொருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது வீதியோரத்தில் நெல் ஏற்றிக் கொண்டிருந்த மட்டக்களப்பு – சித்தாண்டி, மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராசமணி கனேஷன் (53 வயது) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளத்திலிருந்து கிண்ணியா நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆசிரியரொருவரே வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிமோ பட்டாவுடன் மோதி டிமோ பின் பட்டாவிற்கு நெல் ஏற்றிக் கொண்டிருந்த நபருடனும் மோதியுள்ளார்.
இதேவேளை மோட்டார்சைக்கிளில் பயணித்த கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏ.பெரோஸ்கான் (31 வயது) காயங்களுக்கு உள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர்   தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.