கடந்த அரசால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் இந்த அரசு அசமந்தபோக்கு. வன்னியல் 6682 குடும்பங்கள் வீதிகளில் நிர்க்கதி. சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

( வாஸ் கூஞ்ஞ)

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை இந்த அரசாங்கம் பூர்த்தி செய்யாது ஒரு அசமந்த போக்கில் இருந்து வருகின்றது. இதனால் வன்னி மாவட்டத்தில் 6682 குடும்பங்கள் நிர்க்கதியான வாழ்க்கைக்கு உள்ளாகியுள்ளன. இந்த அரசாங்கம் இதில் கவனம் செலுத்தாவிடில் மக்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை (30.03.2021) மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புக்கான நிலுவைப் பணம் சம்பந்தமாக பாதிப்படைந்த மக்கள் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு இங்கு உரையாற்றுகையில்

வன்னி மாவட்டத்தில் 6682 வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இதற்காக 2987.53 மில்லியன் ரூபாய் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய வன்னி மாவட்டத்துக்கு அரசால் வழங்க வேண்டியுள்ளது.

இந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 1691 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 1678 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1313 வீடுகளும் பூர்த்தி செய்யப்படாத வீடுகளாக காணப்படுகின்றன.

இந்த வீடுகளுக்குரிய நிதியை வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இவ் வாழ் மக்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றார்கள் மன்னார் எமிழ் நகர் பெண்மணி செல்வராணி என்பவர் இதன் காரணமாக மயக்கமுற்று இறந்துள்ளார் என்பதை நான் கடந்த வருடம் மார்கழி மாதம் இரண்டாம் திகதி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தேன்.

அத்துடன் இதுவிடயமாக நான் பிரதமரிடமும் கோரிக்கையும் விடுத்திருந்தேன். இதற்கு பிரதமர் 2021 ஆம் ஆண்டு மார்கழி மாதத்துக்கு முன்பு இதற்கான நிதியை விடுப்பிப்பதாக எனக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

இருந்தபோதும் கடந்த வரவு செலவு திட்டத்pன்போது இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக அமைச்சரவைப் பத்திரமும் சமர்பிக்கப்படவில்லை. இதிலிருந்து எமக்கு புரிகின்றது இந்த அரசாங்கம் இதுவிடயமாக ஒரு அசமந்த போக்கில் இருந்து வருகின்றது என்பதாகும்.

கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பிரதமர் மகிந்த ராஐபக்ஜ தலைமையில் நடைபெற்ற நிதி சம்பந்தமான கூட்டத்தில் நான் அவரிடம் கேட்டபோது பிரதமர் தெரிவித்ததாவது இது கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் என அவர் ஒரு அசமந்த போக்காக இதைத் தெரிவித்து இருந்தார்.

நான் இதே பிரமரிடம் கேட்க விரும்புகின்றேன் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட நிதியை இந்த அரசால் வழங்கப்படவில்லையா ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே.

ஆகவே இப்பொழுது எங்கள் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற கோரிக்கையானது ஒரு நியாயமான கோரிக்கையாகும். ஆகவே பிரதமர் கூறியப்படி 2021 மார்கழி மாதத்துக்கு முன் 2987.53 மில்லியன் ரூபா நிதியை இவ் வன்னி மாவட்த்திலுள்ள வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டு நிற்கின்றேன்.

இதுவிடயமாக மார்கழி மாதம் இரண்டாம் திகதி என்னால் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது சபாநாயகர் எனக்கு தெரிவித்தது இந்த சின்ன விடயம் தொடர்பாக நீங்கள் பாராளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

நான் அங்கு வைத்தது சின்ன விடயம் அல்ல 6682 குடும்பங்கள் வீதிகளில் நிர்க்கதியாக இருக்கின்றன. இதற்கு காரணம் அரசாங்கத்தின் திட்டம் முழுமையாக நிறைவேறாததே ஆகும். ஆகவே இந்த அரசாங்கம் இதுவிடயத்தில் இதை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் எங்கள் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் என இவ்வாறு தெரிவித்தார்.