சிறு தொழில் முயற்சியான்மையாளர்களுக்கு கடன் வழங்க திட்டம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை    மாவட்டத்தின் வெருகல், மூதூர் மற்றும் சேருவில ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்ற கடன் உட்பட ஏனைய சேவைகளை இலகுவில் பெற்றுக் கொடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்று இன்று(24) சேருவில பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர் மற்றும் புதிதாக  தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளூர் ஆகியோருக்கு வங்கிகள் மூலம் அவசியமான கடன்  உதவிகளை பெற்றுக் கொடுக்க உதவுவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாம் கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற சந்தர்ப்பத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கான கடன்களை இலகுவான முறையில் வங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, சனச அபிவிருத்தி வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி வங்கி என்பன தமது சேவைகளை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன,  சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.பிரளாநாவன்,வங்கி உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.