ஓட்டமாவடி, மஜ்மா நகருக்கு பாக்கியம் கிடைத்துள்ளது – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதிக்கு இறைவனின் பாக்கியம் கிடைத்துள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மஜ்மா நகர் கிராம மக்களுக்கு பைலா குடும்பத்தினால் நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கையில் பல பாகங்களிலும் இடங்களை தேடிய போதும் இறுதியில் ஓட்டமாவடி, மஜ்மா நகர் பகுதிதான் கிடைத்துள்ளது இதனால் இப்பகுதிக்கு இறைவனின் பாக்கியம் கிடைத்துள்ளது.

அதேபோன்று, ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு காணியை வழங்கிய ஜெளபரை நான் இந்த இடத்தில் கட்டாயமாக பாராட்ட வேண்டும். ஜெளபரின் மனநிலை போன்று உங்கள் எல்லோருக்கும் வர வேண்டும்.

ஜனாஸாக்களை அடக்கும் பாக்கியத்தை இறைவன் இந்த ஊருக்கும் தந்தது போன்று, அடக்கம் செய்ய காணி வழங்கிய நபருக்கும் கொடுத்துள்ளான்.

அதேபோன்று,  நல்லடக்கம் செய்யப்படும் காணிக்கு அருகிலுள்ள காணியை விட்டுக் கொடுத்த நபர்களையும் நான் பாராட்டுகின்றேன்.

இவ்வாறு காணியை அன்பளிப்புச் செய்த விடயம் தேசியத்தில் ஒரு பதிவாக இருக்க வேண்டும்.

ஒரு இஸ்லாமியனுடைய பண்பு இப்படியானவர்களை பாராட்டுவதுதான். அவன் ஒரு எதிரியாக இருந்தாலுல் அதனை நாம் பாராட்ட வேண்டும்.

உண்மையில் இவ்வாறானவர்களை பாராட்டுகின்ற பக்குவம் எம்மிடத்தில் இல்லையென்று சொன்னால் நாம் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது.

நம்மில் பொறாமை, வஞ்சகம், சூது, களவு எல்லாம் நிறைந்து விட்டதென்றால் நமக்கு பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே, எதிர்காலத்தில் ஜனாஸா நல்லடக்கத்தில் நீங்கள் உதவி செய்கின்றவர்களாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். ஜனாஸா நல்லடக்கத்தை பார்க்க வேண்டும். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இராணுவத்தினர்களுக்கு தொல்லைகளை கொடுக்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அரசியல்வாதிகள் அங்கு வந்து படம் காட்டுவார்கள் அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். இது நாம் அல்லாஹ்வுக்காக  செய்கின்ற பணி அதற்கு அல்லாஹ்விடம் எமக்கு கூலியுண்டு என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் குசைன் பைலா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.