உறுப்பினர் மாஹிருக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் வரவேற்பு

(றியாஸ் ஆதம்)

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்ல திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.எம்.மாஹிர் தெரிவத்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மாஹிருக்கு நேற்று (18) சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சபை அமர்விலும் மாஹிர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் தனது கன்னி உரையில் தெரிவிக்கையில்,

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக ஏறாவூர் மிச்நகர் வட்டாரத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு, வேறொரு கட்சிக்கு ஆதரவளித்தார், இதனால் எமது கட்சி ஒழுக்காற்று விசாரனைகளை மேற்கொண்டு குறித்த உறுப்பினரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியது. அதன்காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த என்னை கட்சி இந்த சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்தது.

அந்த வகையில், இந்த சபையில் உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு, என்னை சிபாரிசு செய்த கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், எனது அரசியல் ஆசானுமாகிய எம்.எஸ்.சுபைர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும், சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் மசூறா சபைக்கும் இந்த சபையில் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எனக்கு பெரும் வரவேற்புக்களை வழங்கி, இன்முகத்தோடு வரவேற்ற, தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் சபை உத்தியோகத்ர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இந்த சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்ல திட்டங்களுக்கு எனது கட்சியினுடைய ஆலோசனைகளைப் பெற்று ஒத்துழைப்புக்களை வழங்குவேன் என்றார்.