மட்டக்களப்பு மாநகரசபை அமர்வு ஒத்திவைப்பு

மாநகர முதல்வர் உட்பட சில உறுப்பினர்கள் மற்றும் மாநககர ஆணையாளர் ஆகியோருக்கிடையிலான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது பொதுச் சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சபையின் பதில் செயலாளராகச் செயற்படும் மாநகர ஆணையாளர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

மாநகரசபைக்கான செயலாளர் நியமிக்கப்படாமையின் காரணத்தினால் மாநகர ஆணையாளரே இதுவரை பதில் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார். இன்றைய அமர்விற்கு மாநகர ஆணையாளரால் செயலாளர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை, பதிலாக எவரையும் நியமிக்கவில்லை என்ற காரணங்களை முதல்வர் சுட்டிக் காட்டி செயலாளர் இல்லாமல் சபை நிகழ்வுகளை நடாத்த முடியாது என்று தெரிவித்து சபையை ஒத்தி வைத்தார்.

இது தொடர்பில் மாநகர முதல்வர் தெரிவிக்கையில்,

மாநகரசபையில் பதில் செயலாளராகச் செயற்படும் மாநகர ஆணையாளர் வருகை தராததன் காரணத்தினாலும் செயலாளர் இல்லாமல் சபையை நடாத்த முடியாது என்ற காரணத்தினாலும் இன்றைய இந்த அமர்வினை ஒத்தி வைக்கின்றேன். இது சபை நடவடிக்கைகளை வேண்டுமென்றே இடைநிறுத்துவதற்காகவே மாநகர ஆiணாளரால் மேற்கொள்ளப்பட்ட விடயம். இங்கு எஸ்.எல்.ஏ.எஸ் தரத்தில் இரண்டு அதிகாரிகள் இருக்கின்ற பட்சத்திலும், அவ்விரு நபர்களும் இன்றைய தினம் அலுவலகத்தில் சமூகமளித்திருந்தும் இன்று ஒருவர் கூட தற்காலிக செயலாளர் பதவியை வகிப்பதற்கு வராததன் காரணத்தினால் இன்றைய சபை அமர்வினை நான் தற்காலிகமாக ஒத்தி வைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

இவ்வறிவித்தலைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அவ்வாறு சபையை ஒத்திவைக்க முடியாது, சபையை நடாத்த வேண்டும் என சில உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்த போது செயலாளர் இல்லாமல் எவ்வாறு சபையை நடாத்துவது? அறிக்கையிடுவது யார்? என்ற கேள்விகள் மற்றைய சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.