பாட்டாளிபுரத்தில் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டிய பொலிசார்.

பொன்ஆனந்தம்

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு என சந்தேகிக்கப்பட்ட இடமொன்று இன்று வியாழக்கிழமை அகழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது..

ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே வியாழக்கிழமை (18) மாலை அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இதன்போது அங்கிருந்து எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஐ.முபாரிஸ் மேற்பார்வையில் இந்த  அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்ச, இராணுவ அதிகாரிகள், பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த இடத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின்  திலீபன் மருத்துவமனை இருந்ததுடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கைக் கடற்படை முகாம் இருந்து விடுவிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் இக்காணியில் இருந்து படையினர் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.