இது ஒரு தவறு என்று தயவு செய்து கூறுங்கள்.இரா.சாணக்கியன்

இது ஒரு தவறு என்று தயவு செய்து கூறுங்கள் என  வெளிவிவகார  அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுக்கு தனது ருவிட்டர்  ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கோரிக்கைளொன்றை விடுத்துள்ளார்.

சூழ்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை, பிம்ஸ்ரெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்தினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் எழுதிய கடிதத்தையும் தனது ருவிட்டர் பதிவில்  இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து முதலான நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்தக் கூட்டமைப்பின் 17 ஆவது அமைச்சர்கள் மாநாடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இணையவழி மெய்நிகர் மாநாடாக கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன், மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரான வுன்னா மாவுங் லுவினுக்கு (Wunna Maung Lwin ) அழைப்பு விடுத்து, கடந்த 2ஆம் திகதி குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கடிதமொன்றை அனுப்பியதன் மூலம், மியன்மார் ஆட்சியை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக மியன்மார் பிரஜைகள் தங்களது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.