333 நீண்ட நாட்களுக்குப் பிறகு 9 சடலங்கள் அடக்கம் இன்னும் 20சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய 333 நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று வெள்ளிக்கிழமை  ஒன்பது  சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சூடுபத்தின சேனையில்  அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் அட்டாளைச்சேனை ஒருவர், காத்தானகுடி ஒருவர், அக்கறைப்பற்று ஒருவர்,  சாய்ந்தமருது மூன்று, கோட்டமுனை ஒன்று, ஏறாவூர் இரண்டுமாக மொத்தம் ஒன்பது  சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்காக வெக்கோ வாகனங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டிருந்தது ஒவ்வொரு குழிகளுக்கும் மூன்று அடி இடைவெளியில் தோண்டப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய பணிமணை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுமார் ஒரு வருட காலமாக கொரோணாவில் மரணித்த ஜனாசாக்களின் நல்லடக்கத்திற்காக பாடுபட்ட சிங்கள ,தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், அனைத்து மதப்பெரியார்கள் சிவில் சமூகத்தினர் , வெளிநாடுகளில் வாழும் உறவுகள் மற்றும் துஆப்பிரார்த்தனைகளில் ஈடுபட்ட  அனைத்து உறவுகளுக்கும்  ஹாபிஸ் நசீர் எம்.பி  இந்த சந்தர்ப்பத்தில்  பிரார்த்தனை  புரிவதாகவும் தெரிவித்தார்

மேலும் 20 உடல்கள் குளிர் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளன, அவை அடுத்த சில நாட்களில் ஒட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அடக்கம் செய்யும் இடத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் அவதானித்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்