சுபீட்சம் மிக்க உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது நிகழ்வு.

எப்.முபாரக்
சுபீட்சம் மிக்க உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்தின்  முதலாவது நிகழ்வு வியாழக்கிழமை(4) அக்போபுர கிராமத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.

பால் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் அவற்றை விருத்தி செய்து பொருத்தமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களுடைய வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது  இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
 திருகோணமலை மாவட்டத்தில் சுபீட்சம் மிக்க உற்பத்திக்கிராம  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு உற்பத்தியோடு தொடர்புபட்டதாக காணப்படுகின்றது.
 இதன்மூலம்  இக்கிராமங்களில் இருக்கக்கூடிய தொழில் முயற்சியாளர்கள் மேற்கொள்கின்ற தொழில் முயற்சியை சிறப்பாக தங்குதடையின்றி மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொரு கிராமத்திற்கும்  150 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.சுமார் 200 நபர்கள் தொழில் முயற்சியாளர்களாக மாற்றப்பட சந்தர்ப்பம் உள்ளது.  அரசாங்கம் தொழில்நுட்ப உதவிகளையும்  மேற்கொள்ள உள்ளது. இதனால்  தேசிய உற்பத்தி அதிகரிக்கப்பட்டு நாட்டினுடைய பொருளாதாரம் மேம்படும். குடும்பங்களின் வாழ்வாதாரம் மிக சிறப்பானதாக அமையும் என்று இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள  தெரிவித்தார்.
 மாவட்டத்தில் இனங்காணப்பட்ட தொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களை தடை செய்து உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியுமான அனைத்து வகையான உற்பத்திகளையும் மேற்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.
இதனடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி செய்வது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலை மாவட்டம் பல்வேறு வளங்களை கொண்ட மாவட்டமாக காணப்படுகின்றது. விவசாயத்துறை சார் செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.
 covid-19 வைரஸுக்கு மத்தியில் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற சந்தர்ப்பத்தில் எமது நாட்டினுடைய பொருளாதார செயற்பாடுகள் முடக்கிவிடப்படாமல் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வந்ததன் காரணமாக இன்று எமது செயற்பாடுகள் சாதாரணமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எமது பொருளாதார செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டு செயற்படுவதன் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
எமது  மாவட்டம் ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க சகல துறைகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாக இந்த மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில்  மாவட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அனைத்து மக்களும் இன மத மொழி வேறுபாடின்றி இணைந்து கொள்ளுமாறும் இனவாத அரசியல் கட்சிகள் மற்றும் இனவாத அரசியல் தலைமைகள் உடைய செயற்பாடுகளுக்கு பின்னால் சென்று எமது மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக அமையும் செயற்பாட்டில் பங்குதாரகளாக மாட்டிக்கொள்ள வேண்டாம்.  சரியான பாதையை தெரிவு செய்வது காலத்தின் அவசியமாகும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்தார்.
மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இம்முறை சிறந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவர் கிடைத்திருக்கிறார். குறிப்பாக மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக கிராமங்கள்தோறும் சென்று பிரச்சினைகளை கேட்டு  அறிந்து தீர்ப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுகின்றார். மாவட்ட  அரசியல் தலைமையோடு  இணைந்து மக்களுக்கு அவசியமான அபிவிருத்தி திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தக்கூடியவராக  அரசாங்க அதிபர் காணப்படுகின்றார்.
எனவே மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் சுபீட்சத்தின்  நோக்கு வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டு  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பாதையில்  மக்களும் பங்குதாரர்களாக இருந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை இந்த சந்தர்ப்பத்தில் மேம்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.  அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் அபிவிருத்தி உட்பட ஏனைய விடயங்களை செய்து வருவதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்   மேலும் தெரிவித்தார்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால் சென்று தங்களுடைய வாழ்க்கையை பாழாக்கி கொள்வதைவிட நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து  செயற்படுகின்ற போது அதன் மூலமாக பல்வேறு வகையான சாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் கடந்த கால யுத்தத்தின் காரணமாக தமிழ் சிங்கள முஸ்லிம் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள்.  இதனுடைய பாதிப்புகள் நாட்டினுடைய அதேபோன்று மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக காணப்பட்டது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைக்க இருந்த  வேலைவாய்ப்புக்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தன்னுடைய தலைமையில் 600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை  எமது மாவட்டத்தின் மூவின மக்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் உரிய வேலைவாய்ப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வித பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்படும்  என்றும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்    திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே. பரமேஸ்வரன், கந்தளாய் பிரதேச செயலாளர் திருமதி உபேக்சா குமாரி,  பிரதேச அரசியல் தலைவர்கள்,அரச அதிகாரிகள், கிராமவாசிகளும் கலந்து கொண்டனர்.