கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துகின்ற விடயத்தில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது

அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக எவருக்கும் பாதகமில்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்று கிடைக்க வாய்ப்பிருப்பதாக கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகரமுதல்வர் செயலகத்தில் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துகின்ற விடயத்தில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. தமிழ் சகோதரர்களுக்கு ஒரு பிரதேச செயலகம் கொடுக்கக்கூடாது என்பது எமது நிலைப்பாடல்ல. எல்லைகள் சரியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே இழுபறிக்கு காரணமாகும்.

இது நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையாகும். தமிழ், முஸ்லிம் இரு தரப்புகளும் சுமூகமாக பேசித்தீர்வு காணப்பட வேண்டும். எவருக்கும் பாதகமில்லாமல், இரு தரப்பினரும் திருப்திப்படும் வகையில் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் ஊடாக நல்லதொரு தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

தேசிய அரசியல் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் கல்முனை முதல்வர் கூறியதாவது; இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது அரசாங்கத்துடன் இணக்கமாகச் சென்றே எதையும் சாதிக்க வேண்டியுள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம் தனியார் சட்டம், அபாயா விவகாரம், மத்ரஸா விடயம் என்று பல வகையிலும் நெருக்குவாரங்களை எதிர்கொண்டிருக்கின்றோம்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற வேண்டுமாயின் அரசாங்கத்துடன் சுமூகமாகப் பேசியே அவற்றை அடைந்து கொள்ள முடியும். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தளவில் எதிர்ப்பு அரசியலினால் எதையும் எம்மால் சாதித்து விட முடியாது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழ் சமூகத்திலும் அரச சார்பு அரசியல் வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம்.

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே எமது கட்சியின் எம்.பி.க்கள் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். அதில் பிரதானமாக இருந்தது ஜனாஸா எரிப்பாகும். நல்லடக்கம் செய்வதற்கான வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. அரசாங்கத்தினால் பலதரப்பட்டவர்களினதும் இணக்கத்துடன் கட்டம் கட்டமாகவே நடவடிக்கைகளை முன்நகர்த்த வேண்டியிருந்தது.

இப்போது அடக்கம் செய்யலாம் என்கிற வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும் இடம் தொடர்பிலான இழுபறிகள் எழுந்துள்ளன. அரசாங்கத்தினால் இரணைதீவு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஆகையினால் அரசாங்கம் அதனை மீள்பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

மேலும், எங்களது முஸ்லிம் ஊர்களிலேயே அடக்கம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் பாதக விளைவுகள் ஏற்படுமாயின் நாங்கள் பொறுப்புடமையை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவிருக்கிறோம். நாட்டின் எப்பகுதியில் மரணிப்போரின் ஜனாஸாக்களையும் எமது பகுதியில் அடக்கம் செய்ய முடியும். அதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் மாவட்டம் தோறும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். அல்லது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சம்மாந்துறை, இறக்காமம், முசலி போன்ற பிரதேசங்களிலாவது அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்- என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.நிஸார், ஏ.சி.சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ் நவாஸ், சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர், நஸ்ரின் முர்ஷித் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.