கிழக்கு மாகாண அதிபர்களின் இடமாற்றத்தில் குளறுபடி; தனக்கு சம்மந்தமில்லை

மாகாண கல்வி பணிப்பாளர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை இடமாற்றத்திற்கும் தமக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் நேற்று (03) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அதிபர்களின் இடமாற்றத்தில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் ஊடகங்களில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் மாகாண கல்விப்பணிப்பாளர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற சபைத் தலைவரை அப்பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கோரியிருந்தோம். அவர் இப்பதவிக்கு தகுதியற்ற ஒருவர் என சுட்டிக்காட்டி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தபோதும் மாகாண கல்வி அமைச்சின் முன்னைய செயலாளர் அதனை கவனத்தில் கொள்ளாமல், பொருத்தமற்ற ஒருவரை இடமாற்ற சபைத் தலைவராக நியமித்தமையாலேயே இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது.

கல்முனை கல்வி வலய அதிபர்கள் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவ்வலயங்களில் இருந்து எந்த ஒரு அதிபரும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றப்படவில்லை.

எனவே இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் தமது மேன்முறையீடுகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்வதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நிசாம் மேலும் தெரிவித்தார்