1லட்சம் வேலைவாய்ப்பில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது:

எமக்கு நீதி வழங்குங்கள் என கருணாஅம்மானிடம் தமிழ்மக்கள் மனு!
 வி.ரி.சகாதேவராஜா.

ஜனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஏனைய சமுகங்களுக்கு நூற்றுக்கணக்கில் அவ்வாய்ப்பு வழங்கப்பட்டஅதேவேளை தமிழினத்தில் ஒருசிலருக்கே அதுவும் பின்வழியால் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் முகவராகவுள்ள தாங்கள் இதுவிடயத்தில் நீதி வழங்கவேண்டும்.


இவ்வாறு பிரதமரின் மட்டு.அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பிரதிஅமைச்சருமான கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின்பேரில் பிரதமமந்திரி மஹிந்தராஜபக்ச தைப்பொங்கலைமுன்னிட்டு நாட்டிலுள்ள 100ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கிவருகின்ற வேலைத்திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் 06ஆலயங்களுக்கு காசோலை வழங்குகின்ற நிகழ்வில்வைத்து அங்கு சமுகமளித்திருந்த மக்கள் பிரதிநிதிகள்  கோரிக்கை விடுத்தனர்.


அவர்கள் மேலும் கூறுகையில்:
இவ்வேலைவாய்ப்பிற்காக நேர்முகப்பரீட்சை பிரதேசசெயலகங்களில் அதிகாரிகளாலும் படையினராலும் நேர்மையாக நடாத்தப்பட்டது. ஆனால் சில முகவர்களிடம் கையூட்டல் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.


ஜனாதிபதி கிராமம் கிராமமாகச்சென்று மக்களின் குறைகளை தீர்த்துவருகிறார். ஆனால் இங்கு எமதுஏழைமக்கள் இருந்த நிலபுலன்களை அல்லது தோடு காப்புகளை அடவுவைத்தே முகவர்களிடம் அவ்வாறு கொடுத்துள்ளனர். பரிதாபம்.


விதிமுறைக்கு மாறாக க.பொ.த. சா.த மற்றும் உ.தரம் சித்தி பெற்றவர்களுக்கும் கணவனமனைவி அரசதொழில் உள்ளவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இது அநீதி.
எனவே 3ஆம் கட்டத்திலாவது புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள். உங்கள் பின்னால் மக்கள் ஆதரவளிக்கவேண்டுமானால் இத்தகைய செயற்பாடுகளை செய்யவேண்டும் என்றனர்.


பதிலளித்த கருணாஅம்மான் : இதுபோன்ற முறைப்பாடுகள் என்னிடம் நிறைய வந்தவண்ணமுள்ளன. அடுத்தவாரம் கொழும்புசென்று பிரதமரைச்சந்தித்து இதற்கான தீர்வைப்பெற்றுத்தருகிறேன் என்றார்.