சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி : பத்தரமுல்ல உதைபந்தாட்ட கழகம் சம்பியனானது.

நூருல் ஹுதா உமர்

சீன இலங்கை நட்புறவின் அடையாளமாக 08 வது வருடமாகவும் அளுத்கட இளைஞர் கழகம் மற்றும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரத்னம் விளையாட்டு மைதானத்தில் மௌலவி ஐ.எம். முகம்மட் மிப்லால் தலைமையில் நடைபெற்ற சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தையும் பணப்பரிசு ஒன்றரை லட்சம் ரூபாவையும் பத்தரமுல்ல உதைபந்தாட்ட கழகம் பெற்றுக்கொண்டது.

கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 12 முன்னணி உதைப்பந்து கழகங்கள் மோதிய இந்த சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 16 போட்டிகளை கொண்டதாக வடிவைக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்போட்டியின் இரண்டாம் இடத்தை சூப்பர் ஸ்டார் வி.கழகமும், மூன்றாம், நான்காம் இடத்தை மாளிகாவத்தை மற்றும் பீட்டர்சன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது.

தொடரின் சிறந்த வீரராக சூப்பர் ஸ்டார் வி.கழக வீரர் கிஸாந்தவும் சிறந்த பந்துக்காப்பாளராக சூப்பர் ஸ்டார் வி.கழக வீரர் அந்தோனியும், இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக  பத்தரமுல்ல உதைபந்தாட்ட கழக வீரர் ஜீ.எப். லப்ரோய்யும் தெரிவு செய்யப்பட்டனர். இப்பரிசளிப்பு நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வெற்றிக்கேடயங்களையும், பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.