மாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம்

(வயிரமுத்து திவாகரன்)

விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் மாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வாகரைப் பிரதேச கட்டுமுறிவு மற்றும் ஆண்டாங்குளம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் இருந்து மட்/ககு/கட்டுமுறிச்சி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் மிகவும் வறிய நிலையில் தாய் தந்தையை இழந்த மாணவர்களை பொறுப்பெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதி நேற்று (24) பாடசாலை அதிபர் திரு.ஜீவனேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுடன் இந்த பாடசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

தலைமையுரையின் போது அதிபர் அவர்கள் தான் இராமகிருஸ்ண மிஷனில் இருந்து கல்விகற்றதாகவும், இந்த பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் பல திறமைமிக்க மாணவர்கள் இருக்கின்றனர் எனவும், அவர்களை சிறந்த முறையில் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சிறப்பாக கல்வி கற்பார்கள் எனவும் அத்தோடு ஏனைய கலை, விளையாட்டுத் துறையில் ஆர்வமிக்கவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கு ஆத்மீக உரையாற்றிய சுவாமிஜி அவர்கள் இந்த எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர் என அறியமுடிவதாகவும் இம் மாணவர்களின் நிலையினையும் கருத்தில் கொண்டு இனி வருடா வருடம் அனைத்து மாணவர்களிற்கும் அப்பியாச புத்தகங்கள் வழங்குவதாகவும், தரம் 6 மாணவர்களில் சிலரை இராமகிருஸ்ண ஆச்சிரமத்தில் இணைத்துக்கொள்வதாகவும், மேலும் இங்குள்ள குடும்பங்களிற்கு உதவக்கூடிய வழி வகைகளை ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவேகானந்தர் சமுதாய நிறுவக நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் 2 நாள் தங்கியிருந்து இந்த பாடசாலை சமூகத்தின் மற்றும் மாணவர்களின் நிலைகளை கண்டறிந்ததாகவும், அதன் அடிப்படையில் இம்மாணவர்களில் தாய், தந்தையை இழந்த அல்லது மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களை பொறுப்பெடுக்கும் திட்டத்தினை கனடாவிலிருந்து தொடர்ச்சியான உதவியினை தமது நிறுவகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் திரு.இ.ஏகாம்பரம் அவர்களிடம் தெரிவித்த போது உடனடியாகவே 11 மாணவர்களையும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பொறுப்பெடுத்துள்ளார் என்றும். ஏனைய உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு அதிபர் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க தரம் 9 இல் இருந்து 11 வரையான மாணவர்களிற்கு பின்னேர கற்றலை மேற்கொள்வதற்கான அவர்களிற்கு மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் அதற்கான நன்கொடையாளர்கள் தயாராக இருந்கின்றனர் எனவும் தெரிவித்தார்.