கிழக்கின் செய்திகள் வெளிப்படையாக வரவேண்டும். திருமலைநவம்.

பொன் ஆனந்தம், கதிரவன்

கிழக்கின் செய்திகள் வெளிப்படையாக வரவேண்டும்.பத்திரிகையாளர்கள் துணிச்சலோடு துணிந்து எழுதவேண்டுமென மூத்த ஊடகவியலாளரும் இலக்கியவாதியும் ஓய்வுபெற்ற அதிபருமான திருமலைநவம் தெரிவித்தார்.

திருமலையில் நேற்று நடைபெற்ற  சுபீட்சம் வாராந்தபத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வின்போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்.சற்சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதல் பிரதி ஆன்மீக பெரியார்களிடமிருந்து நகர சபைத்தலைவர் நா. இராசநாயகம் பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து வருகைதந்திருந்த இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், அரசியல்கட்சிபிரமுகர்கள் போன்றோருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம், ஆய்வாளர் யதீந்திரா, உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்..வணக்கத்திற்குரியவர்களான அருட்தந்தை எழில் அவர்களும், அருண்குருக்கள் அவர்களும் ஆசியுரை வழங்கி யிருந்தனர்.  முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். சி. தண்டாயுதபாணி, ஈபிடிபி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஆ. புஸ்பராஜா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்கட்சியின் திருமலை அமைப்பாளர். கு. நளினகாந்தன், உள்ளிட்ட அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் திருமலை நவம் தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தின் சம்பவங்கள் செய்திகள் அனர்த்தங்கள்  அவலங்களை முழுமையாக வெளிக்கொணரக்கூடிய எந்தவொரு பத்திரிகையும் கிழக்கில் இதுவரை வெளிவரவில்லை.

சுபீட்சத்தின் இலக்கு நன்றாகவும் நல்லதாகவும் இருக்கவேண்டும்.சரித்திரகாலம்தொட்டே கிழக்கு ஒரு உணவுக்களஞ்சியமாக விளங்கிவருகின்றது.அதனை வெளிப்படுத்தும் நோக்கில் முன்பக்கஅட்டை அமைந்துள்ளமை சிறப்பான அம்சம்.

1930இல்முதன்முதலில் கிழக்கு தபால் எனும் பத்திரிகையும், 1980ற்கு முன்னும் பின்னும்  பல்வேறு பத்திரிகைகள் வெளிவந்துள்ளன ஆனால் அப்பத்திரிகைகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

1983ற்குப்பிறகு கிழக்குபிராந்தியம் பத்திரிகைத்துறைக்காக பல்வேறு படுகொலைகளை சந்தித்தபிரதேசம்.இருப்பினும் கிழக்கின் செய்திகள் வெளிப்படையாகவரவேண்டும் அதற்காக துணிந்து துணிச்சலான செய்திகளை எழுதுங்கள் என்றார்.