கிராமங்களை வலுவூட்டல்

(வயிரமுத்து திவாகரன்)

விவேகானந்த சமுதாய நிறுவகமானது மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்திய தமது செயற்பாடுகளில் குறிப்பாக சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல மட்டங்களை கருதில் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கிராமங்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் முதற்கட்டமாக கட்டுமுறிவு மற்றும் ஆண்டாங்குளம் இரு கிராமங்களையும் வலுவூட்டுவதற்காக ஆரம்ப கட்டமாக பாடசாலையுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டுவதன் மூலம் கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பகட்டமாக மாணவர்களுக்கான விசேட பயிற்சி பட்டறைகள் நடைபெற்றது.
இன்று சனிக்கிழமை முழுவதுமாக காலையில் 8.00 மணிக்கு யோகாசன பயிற்சியுடன் ஆரம்பித்த இந்த செயலமர்வில் முதலுதவி பயிற்சி மற்றும் மாணவர்களுக்கான வாழ்வியலும் வழிகாட்டலும் போன்ற செயற்பாடுகளுடன் மாணவர்களின் திறன்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலாக அவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக இரவு 9 மணி வரைக்கும் பயிற்சி பட்டறை கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகன் அவர்கள் அனுசரணையுடன் நடைபெற்றது
தொடர்ச்சியாக இந்த பாடசாலை சமூகத்துடன் இணைந்து இந்த இரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

காரணம் வாகரை பிரதான வீதியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரம் காடுகள் வயல்கள் கடந்து அமைந்துள்ள இந்த இரு கிராமங்களும் பொலனறுவை மாவட்ட எல்லைக் கிராமங்களாக வாகரை பிரதேச செயலகப் பிரிவில் காணப்படுகின்றது. அத்தோடு இரு கிராமங்களிற்கும் பொதுவாக க.பொ.த சாதாரண தரம் வரையும் கல்வி கற்கக்கூடிய ஒரு பாடசாலை காணப்படுகின்றது. இங்கு குறைவான வளங்கள் மற்றும் ஆசிரிய வள பற்றாக்குறை இருந்தாலும் இருக்கும் ஆசிரியர்கள் நிறைவாக சேவையாற்றக்கூடியவர்களாக காணப்படுவதோடு, மாணவர்களும் அதிகளவு நேரத்தினை இந்த பாடசாலையிலே கழிக்க விரும்புகின்றனர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த பகுதியில் மிகவும் கஸ்ட நிலையில் உள்ள பிள்ளைகளை பொறுப்பெடுத்து அவர்களின் கல்விக்கான உதவியினை செய்யும் திட்டத்துடன் தொடர்ந்து தரம் 9 முதல் 11 வரையான 39 மாணவர்களுக்கு பாடசாலையின் பின்னரும் மேலதிக கற்றல் மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும், காரணம் வீடுகளிற்கு சென்றுவருவதற்கான தூரம் அதிகம் என்பதாலும் பல வீடுகளில் சாப்பாடு கிடைப்பது கூட குறைவு என்பதாலும் இவர்களுக்கு பாடசாலையிலே சாப்பாட்டினை வழங்க ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதற்கான உதவியினையும் செய்ய விரும்புபவர்கள் அந்த செயற்பாட்டுடன் இணைந்துகொள்ள முடியும் எனவும் விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.