கிழக்கு மக்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் பிரதேச சபை உறுப்பினர் ஐய்யுப் வேண்டுகோள்!

பைஷல் இஸ்மாயில் –

தேர்தல் காலங்களில் மட்டும் முண்டியடித்துக் கொண்டு பொய் மூட்டைகளுடன் கிழக்கு பிரதேசங்களுக்கு வலம் வந்து அப்பாவி மக்களின் வாக்குகளை பெறும் இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் ஜனாஸா விடயத்தில் ஏன் கிழக்கு மாகாணத்துக்கு வரமுடியாமல் போனது என்ற கேள்வியை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐய்யுப் கேள்வி எழுப்பினார்.

ஜனாஸா எரிப்பு தொடர்பாக வராத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நேற்றய தினம் கல்முனைக்கு வருகை தந்திருந்தார். அவரது வருகை மாகாண சபைத் தேர்தலுக்காக நகர்வுகளாக இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் திடீர் வருகை தொடர்பில் ஊடகங்களுக்கு (08) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களை முட்டாள்கள் என்று நினைத்து அரசியல் செய்கின்றார்களா? அல்லது அவர்கள் சொல்லும் பொய்களுக்கு தலையாட்டும் தலையாட்டிகளாக மக்கள் இருக்கின்றார்கள் என்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என கூவித் தெரிகின்ற இரு தலைவர்களும் நடந்து கொள்கிறார்களா? என்றும் கேட்க விரும்புகிறேன்.

ஜனாசாவை எரிக்காதே! எங்களுக்கான நீதியை வழங்கு என்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழ் தலைவர்கள் தலைமை தாங்கி நடாத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமையை இரு தலைமைகளும் உருவாக்கியுள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் அதே கட்சியைச் சேர்ந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் 20வது திருத்தச் சட்டத்துக்கு கை உயர்த்தி அரசின் பங்காளியாக செயற்படுகின்றார்கள் இது என்ன மாயம் இருக்கிறது என்று தெரியாது.

ஆனால், ரவூப் ஹக்கீம் அரசை எதிர்த்தும் மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடனும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல், முஸ்லிம் காங்கிரஸின் தொண்டர்களை வைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை தூண்டிவிட்டு அதன் ஊடாக அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை பெறுவதற்காக மக்களை உணர்ச்சி ஊட்டி முட்டாளாக்கும் சாதுரியமான அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

வட கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் இந்த விடயத்தை சிந்திக்கத் தவறினால் எமது இருப்பு இன்னும் கேள்விக்குறியாகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பை எமது புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், தலைமைகள், மதத்தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தை எமது சமூகம் புரிந்து கொள்ளா விட்டால் அவர்கள் எம்மை படுகுழிக்குள் தள்ளி விட்டுச் சென்று விடுவார்கள் என்பதையும் நாம் அறிந்து கொண்டு நடக்க முயற்சிப்போம் என்றார்.