மாபெரும் பேரணி 3 வது நாளாக திருகோணமலையில் இருந்து முன்னெடுப்பு.!

(ஹஸ்பர் ஏ ஹலீம் )
தமிழ்,  முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் வடக்கு,  கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று (05) 03 வது நாளாக திருகோணமலை சிவன் கோவிலடியில் இருந்து காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.
காலை 8.00 மணிக்கு கோயிலில் விசேட பூசை இடம் பெற்று இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று(04) மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது நாளாக ஆரம்பமான இந்த பேரணி வெருகல்,  கிண்ணியா ஊடாக இரவு திருகோணமலையை வந்தடைத்தது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல் பொருள் என்ற போர்வையில் தமிழ்,  முஸ்லிம் சமூகங்களின் பூர்வீகம் அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை,  காணமல் ஆக்கப்பட்டேர் விடயம், மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றை கண்டித்தே இந்தக் கண்டனப் பேரணி நடைபெற்று வருகின்றது.
திருகோணமலை பிரதான வீதியின் ஊடாக பேரணி, நடைபவனி நிலாவெளி ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து, வடக்கு நோக்கி பயணிக்க இருக்கின்றது.
இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,  எம்.ஏ.சுமந்திரன்,  செல்வராஜா கஜேந்திரன்,  சிவஞானம்ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன்,  சி. யோகேஸ்வரன்,  நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் தலைவர்கள்,  சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.