கொத்தணி சுத்திகரிப்பு மூலம் சாய்ந்தமருதில் ஒரே நாளில் 138 தொண் திண்மக் கழிவகற்றல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) சாய்ந்தமருது பிரதேசத்தில் சுமார் 138 தொண் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வார காலமாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அங்கு குப்பை கொட்டும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்ததால், இக்காலப்பகுதியில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திண்மக்கழிவுகள் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. இதனால் இப்பிரதேசங்களில் பெருமளவு குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

தற்போது, பள்ளக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதையடுத்து, தேக்கமைந்தடைந்துள்ள குப்பைகளை துரிதமாக சேகரித்து, அகற்றும் பொருட்டு, மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் அவசர பணிப்புரை, வழிகாட்டலின் கீழ் வலய ரீதியாக கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதலாவது நாளான திங்கட்கிழமை மாத்திரம் சாய்ந்தமருது வலயத்தில் அனைத்து வீதிகளிலும் 23 திண்மக்கழிவகற்றல் வாகனங்களுடன் 80 சுகாதாரத்துறை ஆளணியினர் களமிறக்கப்பட்டு, சுமார் 138 தொண் குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன.

அதேவேளை ஏனைய 05 வலயங்களிலும் அடுத்தடுத்த நாட்களில் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அப்பிரதேசங்களில் தேங்கிக்கிடக்கின்ற அனைத்து குப்பைகளையும் சேகரித்து அகற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் மேலும் தெரிவித்தார்.