முந்திரி, சோளச்செய்கைப் போர்வையில் மேய்ச்சல் நிலம் அபகரிப்பு.

மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
( களுவாஞ்சிக்குடி நிருபர் ) 
மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்திரி மரம் நடுவதற்கு என்றும், சோளச் செய்கை செய்வதற்குமென மேய்ச்சல் நிலம் அபகரிக்கப்பட்டு வெளி மாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை குடியேற்றும் திட்டம் மயிலத்தமடு, கெவிளியாமடு பகுதிகளில் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கைத் தமிழரசு கட்சி பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்ட பொருளாதாரம் மூன்று முனைகளில் இருந்து வளம்பெறுகிறது. இதில் விவசாய நெற்செய்கை, கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பனவாகும். எனவே விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்பனவற்றை மட்டக்களப்பு மக்கள் நிரந்தர மற்றும் பகுதிநேரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கால்நடை வளர்ப்பாளர்கள் வீட்டில் கட்டி வளர்க்கும் பண்ணை மாடுகளை அதிகளவாக எழுவான்கரை சார்ந்த கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கின்றனர்.

படுவான்கரை பெருநிலம் சார்ந்த கிராம மக்களும், துறைநீலாவணை, களுதாவளை, சித்தாண்டி, வந்தாறுமூலை, வாழைச்சேனை, வாகரை உட்பட இன்னும் சில கிராம மக்களும் தமது வாழ்வாதார தொழிலாக பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான் பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த கெவிளியாமடு தொடக்கம் மயிலத்தமடு வரையுமான காடுகளும் அதனை அண்டிய நிலங்களையும் கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மேய்ச்சல் தரைகளாக பாவித்து வருவது காலாகாலமாக நடைமுறையில் உள்ள செயலாகும்.

மேய்ச்சல் தரைக்கு என்றே இந்தக் காணிகள் அரச காணிகளாக அப்போது இருந்தது, காலப்போக்கில் அந்த அரச காணிகளை மகாவலி அதிகாரசபையும், வன இலாகா திணைக்களமும் தமது தேவைக்காக வர்த்தமானியில் தாம் விரும்பியபடி அரச காணிகளாக தமதாக்கிக் கொண்டனர். இதனால் பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தில் இருந்து கைமாறி நேரடியாக மத்திய அரசின் கீழ் மகாவலி அதிகாரசபை மற்றும் வன இலாகா ஆகியவைகள் மட்டக்களப்பு மாவட்டரசாங்க அதிபருக்கோ பிரதேச செயலாளர்களுக்கோ தெரியாமல் பெரும்பான்மை இனத்தவர்களைக்கொண்டு குடியேற்றும் நோக்காக பயிர்செய்கைப் போர்வையில் நில அபகரிப்பு இடம்பெறுகிறது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தடுக்காமல் விட்டால் எதிர்காலத்தில் பாரிய அபாய நிலை ஏற்படும். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச எல்லைக்குட்பட்ட கச்சக்கொடிச்சுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு, காத்தார், அல்லிச்சேனை, பொன்னாங்கன்னிச்சேனை, பனையடிவட்டை, வீச்சுக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக மேய்ச்சல் தரையாக பாவித்த தேக்கம் காடுகளை உடைய பகுதிகள் தற்போது ஊர்காவல் படையினரின் உதவியுடன் அழிக்கப்பட்டு வேலியிட்டு எல்லைகள் போடப்பட்டு முந்திரிசெய்கை என்ற போர்வையில் 1500 க்கு மேற்பட்ட நிலம் அபகரிக்கப்படுகிறது.


இதனை கடந்த 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினரான கோ.கருணாகரம், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், வெல்லாவெளி பிரதேச தவிசாளர் பு.ரஜனி மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக சென்று பார்த்தபோது, அங்கு காடழிப்பு செய்வதையும் புதிய வேலிகள் அமைப்பதையும் காண முடிந்தது.

இது தொடர்பாக, மாவட்ட அரச அதிபர் கருணாகரனிடம் தெரியப்படுத்தியதுடன், கடந்த 22 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் இருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை பண்ணையாளர்களுடன் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்தி இதனை தடுக்கும்படி பிரதேச செயலர் திருமதி தட்சணாகெளரி தினேஷிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

எல்லைப்பகுதியில் அப்பாவி தமிழ் சிங்கள மக்களை மோதவிடும் நடவடிக்கையில் அரசியல் சக்திகள் செயற்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புத் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு சார்பாக தெரிவாகி தற்போது இராஜாங்க அமைச்சராகவும், அபிவிருத்திக்குழு தலைவராகவும் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா ? இல்லையா ? தங்களால் முடியுமா? முடியாதா ? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநர் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையை கோரியுள்ளார். இதில் ஆயிரத்து ஐந்நூற்று ஏக்கர் காணி அம்பாறை மாவட்டத்திற்கும் ஏனைய ஆயிரத்து ஐந்நூற்று ஏக்கர் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்து வந்த நிலையில் 2015, ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் நீதிமன்ற நடவடிக்கையின் போது அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

எனினும், கடந்த 2020 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மேய்ச்சல் தரைக்காணியை நோக்கி அத்துமீறிய படையெடுப்பை மேற்கொள்ளத் ஆரம்பித்தனர். அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு மகாவன்வெலா ஆரியவன்ச தலைமையிலான குழுவில் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் என கூறுகின்றார். இவர்கள் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுக்குள் அத்துமீறி குடியேற முற்படுவதனால், மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கையும் பாதிப்படைகிறது.

இப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை மேயவிட வேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டு செல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அது மாத்திரமல்ல, கிழக்கு மாகாண ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்ற முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் அரசாங்கத்தின் சுயதொழில் திட்டங்களை வெகுவாக பாதித்து, மொத்தத் தேசிய வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக மேய்ச்சல் தரைக் காணிகளை மேய்ச்சல் தரையாகவே இருக்க வேண்டும் எனவும் மேலும் கூறினார்.