தீர்ப்பினை மதித்து பிள்ளையான் வீட்டை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

அருண் தம்பிமுத்து

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தெளிவான தீர்ப்பை மதிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. என்னுடைய பாரம்பரியசொத்தை என்னிடம் கையளிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தீர்ப்பினை மதித்து பிள்ளையான் வீட்டை என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரைவீதியில் அமைந்துள்ள  தனது வீடுவளவை கையளிக்குமாறு நீதிமன்ற தீர்ப்பைவழங்கியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்ட வழக்கு கடந்ந மூன்று வருடங்களாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.பலதடவைகள் பிள்ளையான் குறிப்பிட்டவீட்டை தனக்கு பணத்துக்கு விற்குமாறுகேட்டுக்கொண்டார்.அதற்கு நான் உடன்படவில்லை.ஏன் நாமல்ராஜபக்சவும் கூட என்னுடன் தொடர்பு கொண்டு அந்தவீட்டை பிள்ளையானுக்கு விற்றுவிடுங்கள் என்றார்.நான் அவரிடம் கேட்டேன் உங்களுடைய பரம்பரை சொத்தான வீரகட்டிய வீட்டை விற்பீர்களா என கேட்டேன்.இது எனது பரம்பரை சொத்து பாட்டனார் தமிழரசுக்கட்சியைச்சேர்ந்த செனட்டர் மாணிக்கம் வாழ்ந்தவீடு இதனை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.

இன்னும் சிலவாரங்களுக்குள் வீட்டுக்குச் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு.தீர்ப்பை மதித்து பிள்ளையான் என்னிடம் வீட்டை ஒப்படைக்கவேண்டும் என்றார்.