நாட்டு பற்றுள்ள சமூகத்தை உறுதிப்படுத்த மத சார்பற்ற குடியரசாக இலங்கை பிரகடனம் செய்யப்படல் வேண்டும்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்து
 
                                      த. தர்மேந்திரா

நல்லிணக்கம், சகிப்பு தன்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றை அணிகலன்களாக கொண்ட முழுமையான நாட்டு பற்று உள்ள சமூகத்தை உறுதிப்படுத்த நமது நாடு மத சார்பற்ற குடியரசாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கு நியமிக்கப்பட்டு உள்ள நிபுணர் குழுவுக்கு  ஐக்கிய சமாதான கூட்டமைப்பால் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவை குறித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி நேற்று வெள்ளிக்கிழமை அவரின் நிந்தவூர் இல்லத்தில் வைத்து தெளிவூட்டினார். இதன்போது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
நாட்டை முதன்மைப்படுத்திய அரசியல் யாப்பு ஒன்றை எல்லா கட்சிகளும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று நாம் முன்வைத்து உள்ளோம். இதற்கு முன்னர் இடம்பெற்ற யாப்பு மாற்றங்கள் அனைத்துமே தனிப்பட்ட நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டவை என்று கோடி காட்டி இருக்கின்றோம்.
நல்லிணக்கம், சகிப்பு தன்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றை அணிகலன்களாக கொண்ட முழுமையான நாட்டு பற்று உள்ள சமூகத்தை உறுதிப்படுத்துவதற்காக மத சார்பற்ற குடியரசாக நமது நாடு பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும் என்று முக்கியமாக வலியுறுத்தி இருக்கின்றோம்.
மக்களுக்கும், நீதி துறைக்கும் பொறுப்பு கூற கூடிய வகையிலான ஜனாதிபதி முறைமையே நமது நாட்டுக்கு பொருத்தமானது என்றும்  எமது முன்மொழிவில் வலிறுத்தப்பட்டு உள்ளது. இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மக்கள் அவர்களுடைய இருப்பையும், மத, கலாசார விழுமியங்களையும் பாகுபாடின்றி பேணி பாதுகாப்பதற்கான உரிமைகளை புதிய அரசியல் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்களின் மத அனுட்டானங்களை பின்பற்றுகின்ற உரிமையில் வேற்று மத தலையீடு இருக்க மாட்டாது என்று யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தி தரப்படல் வேண்டும்.
இன பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள எமது நாட்டில் இனி வரும் காலங்களில் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து நடுநிலையான தீர்மானத்தை எடுத்து கட்டுப்படுத்த கூடிய அதிகாரங்களை கொண்ட தேசிய நல்லிணக்க பேரவை அமைக்கப்படுவதுடன் இதற்குள் எல்லா சமயத்தவரில் இருந்தும் மிக பொருத்தமானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுதல் வேண்டும்.
மத, இன, அரசியல் சார்பற்ற முறையில் மக்களுக்கான வள பங்கீடுகள் நீதியாகவும், நேர்மையாகவும், நேர்த்தியாகவும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அதே போல அரச தொழில் துறைகளுக்கான நியமனங்கள் அனைத்தும் போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்டு பரீட்சார்த்திகள் அவற்றில் பெற்று கொள்கின்ற புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படுதல் வேண்டும்.
தேசிய கீதத்தை ஒருவர் விரும்புகின்ற மொழியில் பாட கூடியதாக இருத்தல் வேண்டும். பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம், தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை ஆகியன தனிப்பட்ட நபர்களுக்கு இருக்க கூடாது. அதே போல அவசர கால சட்ட விதிகளை பிறப்பிக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற ஆளுனர்கள்,  செயலாளர்கள், அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் போன்றோர் சரளமாக தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.