தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினர் பணி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு இன்றி அமையாததாகும்

மாவட்ட அரசாங்க அதிபர்.

தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் மக்களினதும் நலனிலே மிகுந்த அக்கறை கொண்டு கடந்த காலங்களிலே சிறந்த முறையில் செயற்பட்டுவருவதாகவும் இவர்களது பணி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு இன்றி அமையாததாகும் என  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இயங்கி வருகின்ற தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட முன்மொழிவுகள் பற்றிய விடயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில்  நேற்றுமாவட்ட செயலகத்திலே இடம்பெற்றது.

இவ் விசேட கலந்துரையாடலில் ஒவ்வொரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினரும் தங்களுடைய முன்னேற்ற அறிக்கை தங்கள் நிறுவனத்தால் நிறைவேற்றப்பட்ட பணிகள் இவ் ஆண்டு தங்களால் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் பற்றி மிகவும் தெளிவான முறையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில்மேலும் கருத்து தெரிவித்த அரச அதிபர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் அரசாங்கத்தின் குறிக்கோள்களுக்கமைவாக மக்கள் மைய பொருளாதார விருத்திக்கு அளப்பரிய பணியாற்ற  தாங்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இவ் ஆண்டில் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினரினதும் திட்டங்களில் உள்ள சாதக பாதக நிலைமை பற்றி ஆராயப்பட்டது.

கலந்துரையாடலில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் பிரதேச செயலாளர்கள் தவிசாளர்கள் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.