விவசாயப் போக்குவரத்துகள் சீர் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை

கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி
ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா பிரதேச விவசாயிகள் தங்களுடைய விவசாய உற்பத்திகளை சந்தைப் படுத்துவதற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் வீதிப் போக்குவரத்து வசதிகளை சீர் செய்து தர வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது தொடர்பில்  ஊடக அறிக்கையில் இவ்வாறு  வெளியிட்டுள்ளார்.
இன்று (21)அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது
தீனேறி, கண்டக்காடு பெரியவெளி, சின்ன வெளி, கிரான், குரங்கு பாஞ்சான், கல்லடிட்டுவான், மஜீத் நகர், வெள்ளம்குலம், சுங்கான் குழி, பட்டியானூறு போன்ற  பிரதேசங்களில் சுமார் 6000 இற்கும் மேற்பட்ட  ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை சந்தைப்படுத்தலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
மூதூரில் இருந்து கிண்ணியா நடுஊற்று ஊடாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கிரவல் வீதி மற்றும் விவசாய உள் வீதிகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்துள்ளதாலும் அவ் விதிகள் ஊடாக தொடர்ச்சியாக மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் சென்று வருவதனாலும் இவ்விதிகள் தொடர்ந்தும் சேதமடைவது குறிப்பிடத்தக்கதாகும்.
2008ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மேறபடி விதியானது விவசாயிகளின் வயல்களின் ஊடாகவே அமைக்கப்பட்டது மாத்திரமன்றி அவ்விவசாயிகளுக்கு  அதற்கான நஷ்ட ஈடுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இவ்வீதி இதுவரை அரசினால் சுவிகரிப்பு செய்யப்படவில்லை. வரர்த்தமானி அறிவித்தல் செய்யப்படவில்லை. இதுவரை எந்த நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவில்லை.இவ்வீதி எவருடைய முகாமைத்துவத்தின் கீழும் இல்லை என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் பல முறைப்பாடுகளை செய்தும் பல போராட்டங்களை நடாத்தியும் இதுவரை எவராலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
எனவே இவ்விதியையும் ஏனைய விவசாய உள் வீதிகளையும் மேற்பார்வை செய்து விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்றவகையில்  புனரமைப்பு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.