கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.

எப்.முபாரக் 
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு(14) 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹோட்டல் ஒன்றில் வேலை ஆற்றி வருகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதினால் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை கன்னியா பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் 37 வயது எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வீதியில் கடந்த வருடம் மாத்திரம் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகளவில் மது போதையில் வாகனம் செலுத்துவதினாலேயே விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.