வைத்திய சேவைகளை  மருதமுனை தாய் சேய் நலனோம்பு சேவை நிலையத்தில்  பெற்றுக்கொள்ள முடியும்

டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார்
பைஷல் இஸ்மாயில் – 
மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கி வருவதனால், கடந்த காலங்களில் பொதுமக்கள் பெற்றுவந்த  வைத்திய சேவைகளை
மருதமுனை தாய் சேய் நலனோம்பு சேவை நிலையத்தில்
பெற்றுக்கொள்ள முடியும் என்று வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைத்திய சேவைகள் கடந்த (10) ஆம் திகதி முதல் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் அங்கு வந்து வைத்திய சேவைகளை பெற்றுச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மருதமுனை வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது. அதன் மூலம் தூர இடங்களுக்குச் செல்கின்ற எமது தாய்மார்களும் குழந்தைகளும் மருதமுனை வைத்தியசாலையில்
பராமரிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். அவர்களுக்கான பராமரிப்புத் தேவை முடியும் வரை மருதமுனை காரியப்பர் வீதியிலுள்ள தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் வைத்திய சேவைகள் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்னரான காலங்களில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் வழமையாக வழங்கி வந்த வெளிநோயாளர் சேவை, பற்சிகிச்சை நிலைய சேவை, ஆரோக்கிய வாழ்வு சிகிச்சை, உள நல வைத்திய சேவை மற்றும் கிளினிக் சேவை போன்ற அனைத்து வைத்திய சேவைகளும் தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் தொடராக இடம்பெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் இயங்கி வந்த தாய் சேய் நலனோம்பு சேவையும் அதே இடத்தில் வழமை போன்று இடம்பெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நோயாளிகளை விடுதியில்
தங்க வைத்து சேவை செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லாத போதும் அதன் தேவையினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக் கூடியதான மாற்றீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் அச்ச சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு விடுதி வசதி இல்லாது போனாலும் வருகின்ற நோயாளிகளை திருப்தியோடு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கும் நோக்கில் 24 மணிநேர சேவையினை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
மிகக் குறைந்தளவான ஆளணியினர் கைவசம் இருந்த போதிலும் சேவை நேரத்திற்கு அதிகமாக வைத்தியசாலையில் தரித்திருக்கக் கூடிய ஒப்புதலை அனைத்து நிருவாகத் தரப்பினரும் தந்திருப்பது சந்தோசத்தை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.