மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் போக்குவரத்து துண்டிப்பு ; இரு குளங்களின் வான்கதவுகள் திறப்பு

(படுவான் பாலகன் )மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழையின் காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்ட வீதிகள் பலவற்றில் வெள்ளநீர் நிரம்பியதினால் சில கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதுடன், பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பிரதேசத்தின் மாவடிமுன்மாரி – தாந்தாமலை வீதி வெள்ளத்தில் மூழ்கியமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மணற்பிட்டி குழுவினமடு வீதியின் மேலால் நீர் பாய்ந்து ஓடியமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்துக்கும் தடைப்பட்டது. மேலும் மண்முனை சாமந்தியாறு பாலத்தின் மேலால் நீர் பாய்ந்து ஓடியமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையுடன் உப்புக்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு எந்தவொரு மாணவர்கள் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்திற்குட்பட்ட புளுகுணாவை, கங்காணியார் குளங்கள் நிரம்பியமையானால் குறித்த இரு குளங்களினதும் நான்கு வான்கதவுகள் இரண்டரை அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் விவசாய நிலங்கள் சிலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.