வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டு

ந.குகதர்சன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூடி காணப்படுகின்றது.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி காணப்படுவதுடன், மீன் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள் சில திறந்து காணப்படுகின்றது. மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டாலும், வங்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், வாகன போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன இயங்கி வருவதுடன், சில தனியார் நிறுவனங்கள் இயங்காமல் காணப்படுவதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் இணைந்து தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஸ்டிப்பதால் பல இடங்கள் முடங்கப்பட்டு காணப்படுகின்றது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் வாரம் தைப்பொங்கல் வாரமாக இருப்பதால், கடைகளில் பொதுமக்கள் கூடுமிடத்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை வரை அத்தியாவசியத் தேவைகளான மருந்தகம், சில்லறை விற்பனை நிலையங்கள், பொதுச் சந்தைகள், உணவகங்கள், பேக்கரி தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாகவும், உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், எடுத்துச் செல்ல மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் க.கருணாகரன் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.