தமிழ்த்துறைக்கு வணிகப் பட்டதாரி பணிப்பாளராக நியமனம்

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறைக்கு வணிகப் பட்டதாரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பினை ஏற்படுத்துகின்றது. இவருடைய நியமனம் சென்ற வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றுள்ளமை இந்த நியமனத்தின் முறைகேட்டினை பதிவுசெய்கின்றது. அந்நிறுவனத்தில் ஏனைய துறைகள் யாவற்றிற்கும் அத்துறை சார்ந்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நியமனம் ஏன் செய்யப்பட்டது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகள்  சார்ந்த துறைக்கு அப்பாடத்தில் திறமை வாய்ந்தவர்களே நியமிக்கப்பட வேண்டும். அதுவே இத்தனை காலமும் இடம்பெற்று வந்தது. தற்போது கலைத்திட்டத்தினை மறுசீரமைப்பதற்கான ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கினங்க வேலைத்திட்டம் முன்மூரமாக இடம்பெற்று வருகின்றது. பாடசாலைக் கல்வியில் தமிழ்மொழி பிரதான இடத்தினை வகிக்கின்றது. அந்த மொழி சிறப்பாக முன்கொண்டு செல்லப்படும்போதுதான் மாணவர்களுடைய கற்பித்தல் சிறப்பாக இடம்பெறும். இத்தோடு இத்துறையில் இரண்டாம் மொழி – தமிழ் கலைத்திட்டமும் இடம்பெறுகின்றது. அந்தக் கலைத்திட்டம் சிங்கள மொழியினைக் கற்கின்ற மாணவர்களுக்காக வடிவமைக்கப்படுகின்றது. இவ்வாறாக தமிழ் மொழியின் செம்மையினை இடர்பாடின்றி பாடசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு தமிழ்மொழியில் புலமை உள்ளவர்களே அந்த பதவியிக்கு நியமிக்கப்பட வேண்டும்.
அந்நிறுவனத்தில் இந்தப் பதவிக்கு தகைமையானவர்களும், சிரேஸ்ட தரத்தில் உள்ளவர்களும் இருக்கும்போது, இந்த நியமனம் முறையற்றவகையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த நியமனத்தால்
 தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கற்கின்ற மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
 இரண்டாம் மொழியாக தமிழைக் கற்கின்ற சிங்கள, மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நியமனம் குறித்து உடன் செயற்பட்டு, தமிழை அழியவிடாமல் காப்பதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கடந்து, பொருத்தமான ஒருவரை இத்துறைக்கு உடன் நியமிப்பதற்கு முன்வரவேண்டும்.