நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவு; முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

திங்கட்கிழமை (11) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு மற்றும் கொவிட்–19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை பலவந்தமாக எரியூட்டுவது போன்ற செயற்பாடுகள் நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமதிக்கும் அரசாங்கத்தின் வெளிப்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.

இந்நடவடிக்கைகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை (11) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் கடையடைப்புக்கு முஸ்லிம் சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுகொள்கிறது- என்று குறிப்பிட்டுள்ளார்.