வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

 ஊடகப்பிரிவு-

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும்  வடக்கு, கிழக்கில் நாளை (11) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ளன.

எனவே, நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்கள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இல்லாமலிருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம்  கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்.